மிகத்தாமதமான குரலில்தான்!
உரையாடல் தொடங்கியது!
மழை தூறலிட்டு பெருமாரியாகி ஓய்கையில்!
ஓராயிரம் சொற்களைப்பேசிக் களைத்திருந்தோம்!
மாயப்புன்னகையில் மலர்ந்து!
கத்திகளாய் நீண்ட சொற்கள் வரையிலும்!
தந்திரமான மௌனத்தோடு கடல் கூடவந்தது!
நிழல் பிரிந்த உருவங்களின் மிதப்பில்!
வெளியின் மர்மங்கள் அவிழ்ந்தன!
காற்று!
சொற்களின் வெற்றிடங்களிலிருந்து திரும்பி!
கண்ணாடிக்குவளையுள் நிரம்பித்ததும்பியது!
பேசாத சொற்கள் குறித்துக்கவலையில்லை!
பேசிய சொற்களிலோ!
கண்ணீரோ துயரமோ இருக்கவில்லை!
வெறும் புழுதி!
வசவுகளாய் படிந்துபோனது!
குரல் இறங்கி சரிவுகளில் உருண்டு!
தடுமாறிய தருணத்தில்!
சில வார்த்தைகளை!
அவசரமாக என்கைகளில் வைத்துப்!
பொத்தியபடி நீ வெளியேறினாய்!
ஒளியும் நிழலுமற்ற வார்த்தைகள் அவை!
அர்த்தங்கள் நிறைந்த!
ஒரு சோடிச்சொற்களையாயினும்!
சாத்தப்பட்ட நகரத்தின் சுவர்களில் எழுதியிருக்கலாம்!
ஒருவேளை அவற்றில்!
பறவைகள் சில கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம்!
எந்தப் பிரகடனங்களுமற்று!
தாகித்து அலைந்து சலிப்புறும் போது!
இருளில் நச்சுப்புகையாய் சொற்கள் மேலெழுகையில்!
நதியொன்றினது உள்ளுற்றிலிருந்து!
சரித்திரத்தின் பிணங்கள்!
நாம்பேசாத சொற்களைப் பேசத்தான் போகின்றன!
அப்போது கடல்!
கரையிலிருந்து எம்சுவடுகளை!
உள்ளிழுத்துச் சென்றுவிடும்!
-சித்தாந்தன்
சித்தாந்தன்