இந்த இரவு!
பிணமாய் விறைத்துக் கிடக்கிறது!
காற்று உருகி இலைகளில் வழிகிறது!
மழை இருளிலேறித் தாண்டவமாடுகிறது!
உறங்கும் தீக்குச்சியை உரச மூண்ட தீ!
பெருங்காடாய் எரிகிறது!
திசைகளின் முரண்களிலிருந்து!
ஈனத்தில் பிறப்பெடுக்கும் வனமிருகங்களின்!
ஒழுங்கற்ற ஒலிக்குறிகளை !
வாசித்தபடி புணரத்தொடங்கினோம்!
ரூபங்களின் இணைவில் !
பொங்கிய பாலிமையின் உச்சத்திலிருந்து!
வடிந்து வற்றத்தொடங்கியது பசி!
நீயற்ற வெளி என்மீது கவிகையில்!
எம் அந்தரங்கங்களில் !
இதழுதிர்ந்த காதல் சருகின் படபடப்பு!
மழை தாண்டவமாடுகிறது!
இரகசியக் கால்வாய்களில் பெருகும் வெள்ளம்!
பாறைகளை இழுத்துச் சுழிக்கிறது!
எம் படுக்கையின் கீழ் கடல்!
நீ உன் கடலில் இறங்கி நடக்கலானாய்!
நான் என் கடலில் இறங்கி நடக்கத்தொடங்கினேன்!
வெறும் படுக்கைதான்!
தெப்பமாக மிதந்துகொண்டிருக்கிறது!
- சித்தாந்தன்
சித்தாந்தன்