பொன்பெறும் பொழுதினை போக்குகிறாய் - மனம்!
பொறுப்பிலா தனத்தினைத் தேக்குகிறாய்!!
உன்பலம் அறியா துறங்குகிறாய் - மதி!
ஓம்விட ஏனோ தயங்குகிறாய்!
குருதியை வியர்வாய் சிந்தாமல் - வியர்!
குளத்தினை குருதியாய் கருதுகிறாய்!
சிறுதுயர் வரினும் சோர்ந்திடுவாய் - அது!
சிறுமை என்பதை மறந்திடுவாய்!
மண்ணை முட்டா சிறுவிதையும் - தளிர்!
வளர்த்தே மரமாய் வருவதில்லை!
சிந்தை செய்யா சிறுமதியால் - சிறு!
துரும்பைப் பெயர்க்கவும் முடிவதில்லை!!
முடவனும் முயன்றால் மலைதுரும்பு - நகர்ந்(து)!
உருக(ல்)லை சிதைத்திடும் சிற்றெரும்பு!
கடவுளும் உதவார் மலைத்தவர்க்கு - இதை!
கருத்திடு! சோம்பல் குணமொதுங்கு!!
ஒட்டும் மண்தான் ஒட்டுமெனும் - ஒரு!
ஓட்டைப் பழமொழி சொல்லாதே!!
முற்றும் அதையே நம்பாதே - பி(ன்)னம்!
முதுமையில் துடித்தே வெம்பாதே!!
காலம் என்பது உயிராகும் - அது!
விழுந்தால் முளைக்கா மயிராகும்!
மூலை எள்ளவர்க் குலகாகும் - இதை!
முற்றும் உணர்ந்தால் உயர்வாகும்!!
கவிதை: அகரம் அமுதா

அகரம் அமுதா