இலை - வைரமுத்து

Photo by Patrick Perkins on Unsplash

நிறைந்த வாழ்வு என் வாழ்வு

நான் குளித்த மிச்சத்தில்
பூமி குளித்தது

சூரியக்கீற்று
என்னைத் தொட்ட பிறகுதான்
மண்ணைத் தொட்டது

பகலில் நான் விட்ட மூச்சில்
பாழ்பட்ட காற்று
பத்தினியானது

இந்த மரத்தில் நான்
எடுத்தது பகுதி
கொடுத்தது மிகுதி

என் வாழ்விலும்
சாயம் போகாத சம்பவங்கள்
இரண்டுண்டு

அடையாளம் தெரியாத புயலொன்று
தளிர்களையும் தலைவாங்கிப் போனதே
அந்த ராட்சச ராத்திரியும் -
பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்.

ஒருநாள்
ஒண்டவந்த ஒரு பறவை
கிண்டியது என்னை

"மலராய் ஜனிக்காமல்
கனியாய்ப் பிறக்காமல்
இவ்வடிவு கொண்டதெண்ணி
என்றேனும் அழுதாயோ
ஏழை இலையே!"

காற்றின் துணையோடு
கலகலவென்று சிரித்தேன்

"நல்லவேளை
நான் மலரில்லை

தேனீக்கள் என்கற்பைத்
திருடுகின்ற தொல்லையில்லை

நல்ல வேளை
நான் கனியில்லை

கிளிக்கூட்டம் என் தேகம்
கிழிக்கின்ற துன்பமில்லை

இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்"

அதோ அதோ
வாயு வடிவில்
வருகுதென் மரணம்

இதோ இதோ
பூமியை நோக்கி
விழுகுதென் சடலம்

வழிவிடு வழிவிடு
வண்ணத்துப் பூச்சியே

விலகிடு விலகிடு
விட்டில் கூட்டமே

நன்றி மரணமே
நன்றி

வாழ்வுதராத வரமொன்றை
வழங்க வந்தாய் எனக்கு

பிறந்த நாள் முதல்
பிரிந்திருந்த தாய்மண்ணை
முதன்முதல் முதன்முதல்
முத்தமிடப் போகிறேன்

வந்துவிட்டேன் தாயே
வந்துவிட்டேன்

தழுவிக்கொள் என்னைத்
தழுவிக்கொள்

ஆகா
சுகம்
அத்வைதம்

வருந்தாதே விருட்சமே

இது முடிவில்லை
இன்னொரு தொடக்கம்

வாழ்வு ஒரு சக்கரம்
மரணம் அதன் ஆரம்
சக்கரம் சுற்றும்

கிளைக்கு மறுபடியும்
வேறு வடிவில் உன்
வேர்வழி வருவேன்

எங்கே
எனக்காக ஒருமுறை
எல்லா இலைகளையும்
கைதட்டச் சொல்
வைரமுத்து

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.