போ வெளியே புத்தனின் “புத்தா” - தமிழ்ப்பொடியன்

Photo by engin akyurt on Unsplash

நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
ஆறாத புண்களோடும் மாறாத வடுக்களோடும் தான்!
கைகளில் எழுதுகோல்களை தூக்கியிருக்கிறோம்.!
எழுதுகோல்களை பிடிப்பதற்காக மட்டுமே!
எங்களின் கைகளை மெளனித்துள்ளோம்.!
எங்கள் கைகளும் உயர்ந்து இருந்தது “ஒருகாலம்”.!
நாங்கள் சொல்ல நீங்கள் கேட்டது “அந்தக்காலம்”.!
நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கவேண்டியதாய் இடக்குது “இந்தக்காலம்”!
காலங்கள் மாறும் அது விதி.!
கவலைகள் தீரும் அதுவும் விதி.!
“எதை” முற்றாக முடித்து விட்டதாய் எக்காளம் இடுகிறாயோ!
“அது” ஆரம்பித்த இடத்தில் நிற்பதை மறந்துவிடாதே..!!!!
“எதை” குழிதோண்டி புதைத்து விட்டதாய் கொக்கரிக்கிறாயோ!
“அது” முழைத்த இடத்தில் நிற்பதையும் மறந்துவிடாதே...!!!!
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
ஈழத்தமிழனின் கல்வி எனும் மூலதனம்!
அது கருக்கொண்டு கிடப்பது பல்கலைக்கழகத்தில்...!
அழிக்க நினைக்கிறாய் அடியோடு சிதைக்க வருகிறாய்...!
துப்பாக்கி முனைகளின் கூர்மையும் அறிவோம்!
எழுதுகோல்களின் வலிமையும் அறிவோம்.!
அடக்குமுறை உன்னை அனுப்பியவனுக்கும் புதிதல்ல...!
அதை எதிர்த்து நிற்பது எங்களுக்கும் புதிதல்ல...!
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
நாங்கள் என்னடா கேட்டோம் உன்னை?!
உன் வீட்டில் விருந்தா? இல்லை உன் சம்பளத்தில் பங்கா?!
என் இரத்தம் ,என் உறவு, என் தம்பி, என் அண்ணன்!
எத்தனை பேரை சதைக்குவியலாய் கூட்டி அள்ளி !
குழிதோண்டிப்புதைத்தோம்..!
என் பள்ளித்தோழர்கள் பலர் படங்களாய் மட்டுமே சுவர்களில்...!
அவர்களை நினைப்பது தவறென்றால்!
அவர்களுக்காய் ஆயிரமாயிரமாய் ”தீபங்கள்” எரியும்.!
தீபங்கள் ஏற்றுவது தவறென்றால் அவர்களுகாய் !
நினைவு தூபிகள் எழுப்புவோம்.!
அதையும் நீ இடித்தால் அவர்களுகாய் “ஆலயங்கள்” கட்டுவோம்.!
நாசமறுப்பானே உன் “வெசாக்” பண்டிகையில் குழப்பம் செய்யவில்லையே .....!
எதற்காக உனக்கு எங்கள் “கார்த்திகை நாளில்” கடுப்பு?!
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
என்னை கேட்காமல் என் படலை திறந்தது தப்பு!
படலை திறந்ததும் இல்லாமல் என் முற்றத்துக்கு வந்தது தப்பு!
திறந்த வீட்டுக்குள் “ஏதோ” நுழைவது போல வந்த நீ!
என்மேல் கை வைத்தது பெரிய தப்பு!
கை வைத்ததும் இல்லாமல் “ சட்டம்” பேசுவது அதை விட பெரிய தப்பு!
இதையெல்லாம் விட உன் ”கைகளில் இருப்பது” மன்னிக்கமுடியாத தப்பு.!
உன் கைகளில் உள்ள இரும்புக் கட்டைக்கு தெரியும் !
எங்களின் நெஞ்சுறுதி..!
ஏனெனில் நேற்று அவை எங்களிடம் இருந்தவை!
இன்று உங்களிடம் இருக்கிறது !
நாளை அவை எவனோ ஒருவனின் கைகளில்...!
இது பகவத் கீதையில் சொன்னது.!
அதே பகவதீதையில் தான் இதையும் சொன்னார்கள்..!
”அதர்மம் தலை தூக்கி ஆடும் போது அதை அழிக்க தர்மம் !
மீண்டும் அவதாரம் எடுக்கும்.....”!
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
என் கைகளை வேண்டுமானால் உன்னால் விலங்கிட முடியும்.!
என் கால்களை வேண்டுமானால் உன்னால் கட்டி வைக்க முடியும்.!
என் கண்களை வேண்டுமானால் உன்னால் குருடாக்க முடியும்.!
என் உணர்வுகளை என்ன செய்வாய்? !
என் எண்ணங்களை என்ன செய்வாய்?!
என் கனவுகளை என்ன செய்வாய்?!
என் இலட்சியங்களினை என்ன செய்வாய்?!
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால்!
ஊமைகள் அல்ல.!
நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால்!
முடங்களும் அல்ல.!
குண்டு மழையிலும் குருதிச்சகதியிலும் வாழ்ந்தவர் நாங்கள்!
ஆயிரம் ஆயிரமாய் மரணங்களினை கண்டவர் நாங்கள்!
பட்டிணியிருந்து பசியால் மெலிந்தவர் நாங்கள்!
எத்தனை இடர் வரினும் எழுதுகோல்களை கைவிடாதவர் நாங்கள்!
எங்களின் இன்னொரு கை சும்மாதான் கிடக்கிறது இப்போது....!
அதில் என்ன தரப்போகிறாய் என்பதை நீயே தீர்மானித்துக்கொள்.!
கார்த்திகை செடிகளை எல்லாம் வேரோடு புடுங்கி எறிந்து !
கொக்கரிக்கும் கோதாரி விழுவானே....!!!!
அதன் “கிழங்குகள்” எல்லாம் மண்ணில் !
விதைகளாய் கிடப்பதை மறந்துவிடாதே...!
நில்..!
வெளியே புத்தனின் “புத்தா”
தமிழ்ப்பொடியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.