சொல்ல.. நீ-நான்-அவர்கள்.. மனித நேயம் - மன்னூரான்

Photo by Jr Korpa on Unsplash

சொல்ல முடிந்திட்ட சொப்பனங்கள்.. நீ - நான் - அவர்கள்.. மனித நேயம் அது எங்கே?!
01.!
சொல்ல முடிந்திட்ட சொப்பனங்கள்!
-------------------------------------!
கண்களை மூடி நான்!
கட்டிலில் சாய்ந்திட!
கனவுகள் கோடியென்!
காலடி தேடும்.!
என்னவோ அறியேன்!
என் கனவில் மட்டும்!
எவரெவரோ வருவர்!
எங்கெங்கோ திரிவர்.!
ஆண்களும் வருவர்!
பெண்களும் வருவர்!
அர்த்தமில்லாமல் !
ஏதேதோ உரைப்பர்.!
ஏதும் பகராமல் !
என்பாட்டில் கிடக்கும்!
என்னையும் தம்முடன்!
எங்கெங்கோ அழைப்பர்.!
அண்மைக் காலமாய்!
அடியேன் கனவில்!
பெண்மைச் சாதிக்கே!
பெரும்பங்கு உண்டு.!
கறுப்புடை அணிந்தொரு!
காரிகை வந்தாள்!
பொறுப்புடன் ஏதேதோ!
புத்தியும் சொன்னாள்.!
மதிமுகம் கொண்டொரு!
மங்கை வந்தாள் - நான்!
மகிழ்வொடு நகைக்கையில்!
மாயமாய் ஆனாள்.!
வாழ்க்கை வாழத்தான்,!
வாழ்வோம் வா என்று!
வசனம் பேசினாள்!
வனிதையொருத்தி.!
எல்லாம் மாயை,!
இறப்பே உண்மை!
இரைந்து மறைந்தாள்!
இன்னொருத்தி.!
காதல் உறவது!
கன்னியமானது!
கட்டியம் கூறினாள்!
கோதையொருத்தி.!
காதல் என்பது !
கண்கட்டு வித்தை!
போதம் உரைத்தாள்!
பேதையொருத்தி.!
பாச பந்தங்கள்!
பலம் மிகக் கொண்டவை!
நேசம் விதைத்தாள்!
நங்கையொருத்தி.!
வேசத்தின் மறுபெயர்!
பாசம் என்று!
விளக்கம் தந்தாள்!
வேறொருத்தி.!
எதைத்தான் ஏற்பது!
எதை நான் மறுப்பது!
என் நிலை!
எனக்கே புரியவில்லை.!
இதுபிழை இதுசரி!
இப்படித்தான் என!
எடுத்துச் சொல்லவும்!
எவருமில்லை.!
நிஜ வாழ்க்கையில்!
நிம்மதி இழந்தவர்!
கனவினை யாசித்துக்!
கண்ணயர்வர்.!
கனவே கலகத்தின் !
கருவென்றானால்!
கதியற்ற மானுடர்!
எங்கு செல்வர்?!
02.!
நீ - நான் - அவர்கள்!
----------------------------!
கரைதொடும் அலைகளாய்!
அடிக்கடி என்!
மனதைத் தொட்ட வண்ணம்!
உன் நினைவுகள்!!
விட்டுப்போன அலையின்!
ஈர ஸ்பரிசத்தை!
சுமந்தபடி காத்திருக்கும்!
கடற்கரை மணலாய்!
நான்!!
அலைக்கும் கரைக்கும்!
நடக்குமிந்த ஊடலை!
வேடிக்கை பார்த்தபடி!
காற்றுவாங்கும் மனிதர்களாய்!
இந்த சமூகம்!!
!
03.!
மனித நேயம் அது எங்கே?!
---------------------------------------!
மனித நேயம் இங்கே!
மரித்துப் போனதோ?!
கால்நடை வேட்டைக்கே - அன்று!
கட்டுப்பாடு இருந்தது.!
மனித வேட்டைகூட!
மரபாகிவிட்டபோது...!
பெற்ற தாயின் அரவணைப்பில்!
பேதமின்றித் தான் வளர்ந்து!
உற்ற ஒரு நிலையடைந்து!
உறவுகளை உதறுகையில்...!
மாதா பிதா குரு!
மாண்பு மரியாதை நீங்கி!
வேதாந்தம் பேசுகின்ற!
வீணர்கள் வாழுகையில்...!
சட்டம் செய்யாததை!
தருமம் சாதிக்குமென்பர்.!
தாரணியில் தருமமது!
தலை கவிழ்ந்து நிற்கையிலே...!
”சாதி இரண்டொழிய!
வேறில்லை” என்ற ஔவை!
நீதிமொழி எங்கெங்கோ!
நிலைதவறிப் போனபின்னே...!
அஞ்ஞானம் போக்கிப் பல!
ஆக்கங்கள் கொண்டுவந்த!
விஞ்ஞானம் அழிவினுக்கே!
விதைவிதைக்கும் வேளையிலே...!
தகுதிகள் பெற்ற பல!
தக்கோரும் கதியின்றி!
அகதிகளாய் எங்கெங்கோ!
அவலமுற்று வாடுகையில்...!
சீதனக் கொடுமையினால்!
சீரழியும் மாதர் குலம்!
நீதி கேட்டு நாளுமிங்கே!
நெட்டுயிர்த்து ஏங்குகையில்...!
கொலை கொள்ளை கற்பழிப்பு!
குடி சூது குற்றங்கள்!
வலைபோல மாந்தர் தம்மை!
வளைத்திழுத்து வீழ்த்துகையில்...!
மனித நேயம் இங்கே!
மரித்துப் போனதோ?
மன்னூரான்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.