என்னைச் சுற்றி நிற்கும் காலம்
சுவர்களாய்
இத்தருணம்
விழிகள் இமைகலை
யிழந்ததெபோதென்று
நிர்ணயிக்க முடியவில்லை
சுவாசம் நெருக்குமிரவின் நிசப்தம்
மரவட்டையாய் என்னைச் சுருட்டும்
துயரம் சிகரெட்டின் துணை தேடும்
என்னைப் போல் பெட்டிக்குள்ளிருக்கும்
ஒற்றைத் தீக்குச்சி
எரியும் முகத்தால் சிகரெட்டை முத்தமிடும்
உலைக்கலன் போல் கொதிக்கும்
உயிர்க்கலன்
வாய்வழிபுகை பரத்தும்
சுவற்றில் என் நிழல்
தீய்ந்து போகிற என்னை எனக்குக்
காட்டும்
வேறேதும் செய்யத் தோன்றாமல்
குவளை நீரைக் கொஞ்சம்
கொஞ்சமாயருந்தி
என் நிழல் மீது துப்புகிறேன்
என் மீதும் துப்பிக்கொள்கிறேன்
நட்சத்திரமொன்றிலிருந்து கேட்கிறது
வளையோசை
என் மனைவியின் வளையோசை.
- லாவண்யா (நன்றி : திண்ணை)

லாவண்யா