எப்போதும் ஆவென்றபடி கிடக்கும்!
உன் வாயிலிருந்து!
புழுக்கள் நெளிவதை!
நானும் கண்டு கொண்டேன்.!
நூற்றாண்டுகளுக்கு முன்!
உன் தந்தையர் கடித்துச் சுவைத்த!
நரமாமிசத்தின் மீதியிலிருந்து!
உனக்கான புழுக்கள் உருப்பெற்றிருக்கின்றன.!
அழுகி வடியும் துர்முகத்தினூடே!
புண்களால் வழிந்தொழுகும் நிணத்தினூடே!
கற்றை கற்றையாய் எட்டிப் பார்க்கின்றன!
பற்களிலிருந்து வெளிப்படும் புழுக்கள்!
செத்துப்போன மிருகங்களின் உடல்களிலும்!
அழுகிப்போன பண்டங்களிலும்!
மூக்கைச் சுழிக்க வைக்கும் மலத்திலும்!
நான் கண்டு கொண்ட நெளியும் புழுக்களை!
இன்று உன் பல் ஈறுகளிலும்!
கண்டு கொண்டேன்.!
உன் கதையினூடேயும்!
உன் செயலினூடேயும்!
உன் நாவுக்கும்!
விரல்களுக்கும் அவை தாவுகின்றன!
கொஞ்சம் கொஞ்சமாய்!
எனக்கும் தொற்றிவிடுமோ என்று!
இப்போ நானும் அச்சம் கொள்கிறேன்.!
என் அப்பா, அப்பாச்சி கூட!
உன் தந்தையர் பற்களிலிருந்து!
முன்னரும் புழுக்கள் நெளிந்ததைக்!
கண்டு கொண்டதாகச் சொன்னார்கள்.!
நூற்றாண்டுகள் கழிந்த பின்னும்!
நரமாமிசம் தின்ற வாயை!
தண்ணீர் விட்டுக் கொப்பளிக்க!
இன்னுமா உனக்குத் தெரியவில்லை?!
ஆறாத புண்ணிலிருந்து!
உற்பவிக்கும் வெள்ளைப் புழுக்கள்!
இனி, முல்லைப் பல் காட்டிச் சிரிக்கும்!
உன் குழந்தைக்கும் தொடர வேண்டாம்
துவாரகன்