ஒருசுண்டு கஞ்சி காய்ச்சி!
உறவெல்லாம் கூடியிருந்து!
வயிறார உண்டுகளித்த!
வசந்த மினி வந்திடுமா...!
அம்மம்மா கதை சொல்ல!
அப்பப்பா நடைபழக்க!
அத்தைசோறு ஊட்டிவிட்ட!
அந்தக்காலந்தான் வந்திடுமா...!
அம்மாகை ஓங்கிவர!
அப்பம்மா அதைத்தடுக்க!
தேம்பியழும் எந்தனுக்கு -கிடைத்த!
தேறுதலினி கூடிடுமா...!
பள்ளிசென்று வந்தவுடன்!
களைநீக்கும் அப்பம்மா!
துள்ளிவிளையாடிவிட !
சொல்லித்தரும் அம்மப்பா...!
தலைவலி காய்ச்சலுக்கு!
தைலங்க ளேதுமின்றி !
பாட்டிசெய்த வைத்தியத்தில் !
கிடைத்த சுகந்தான் கிட்டிடுமா..!
கூட்டாக கதைபேசி!
குடும்ப பலம் வலுத்திட்ட!
கூடிக்களித்த காலமினி!
கோடிகொடுப்பினும் மீண்டிடுமா
த. எலிசபெத்