ஊரைச் சுருட்டி உண்ட உடையார் பரம்பரை என்!
பேரைச் சொல்லவென பெற்ற பிள்ளை நான்கு உண்டு!
பாரை ஆண்டிடுவோம் பலதடவை சொல்லியதால்!
தாரைவார்த்து சொத்துகளை தங்கிவிட்டேன் குடிசையிலே.!
காலமும் சில கடந்து கண்மணிகள் வாழ்வினிலே!
கோலமும் மாறிவிட கொண்டவரால் எனைமறந்து!
பாலமும் அறுந்துவிட பாதிவழி ஏதறியா!
மூலமும் வேரறுந்த முழுமரமாய் வீதியிலே.!
உண்ணுதற்கு வேண்டுமென ஊரிலே கேட்பதற்கு!
எண்ணுதற்கு என் மனமும் ஏற்றங்கள் பார்த்ததினால் !
புண்ணிருக்கு தெரிந்திருந்தும் புறம்போன பிள்ளைகளால்!
கண்ணிருந்தும் குருடன்போல் கனநாளாய் நான் அலைந்தேன்.!
பசியுமோ உடலைவாட்ட பாதமும் நடையால் நோக !
வீசிய தென்றல்கூட வினைப்பயன் உரைத்துச் செல்ல!
காதுமோ ஊனம் காண கண்களும் இருண்டுபோக!
நானுமோ சாய்ந்துவிட்டேன் நடைப்பிணம் கல்லறைக்குள்.!
தூங்கிய சில துளிக்குள் தூக்கத்தைக் கலைப்பார் போன்று!
ஓங்கியே சிரித்த அந்த ஓரிரு குரல்கள் கேட்டு!
ஏங்கிய பசி மறந்து என் மனச் சுமை தறந்து!
கேட்டபோது நொந்தேன் நானும் கேவலம் என் வாழ்வுக்காக.!
நாட்பல பசிகிடந்து நகர்வுகள் ஒன்றே கண்ணாய்!
வான்படை மட்டுமன்றி கடற்படை மையம்கூட!
தூள்பட உடைத்த சேதி சுத்தமாய் பலவும் சொல்லி!
கல்லறை பலவும் சேர்ந்து கலந்துரையாடல் கேட்டேன்.!
இவையெல்லாம் கேட்ட பின்பு இதயமும் சுமைகுறைந்து!
பிறருக்காய் வாழ்தல் ஒன்றே பேரின்பம் வாழ்வில் எண்ணி!
எழுந்தவன் வலுவை ஊட்டி என்மனம் சாந்தி தேடி!
எல்லையில் படையில் சேர்ந்து என்னுயிர் பிரிதல் ஒன்றே!
புண்ணியம் எண்ணக் கால்கள் போகுதே பசி மறந்து.!
-த.சு.மணியம்

த.சு.மணியம்