90களின் பின் அந்தி - ஸமான்

Photo by Paweł Czerwiński on Unsplash

ஒரு ஊசாட்டமும் இல்லை!
என் செம் மண் தெருவை!
தார் ஊற்றி கொன்றது யார்!
90களின் பின் அந்தியா இது!
அப்போது காகங்கள் என்றாலும்!
தெருவை கலைத்துக் கொண்டிருக்கும்!
ராணுவ வீரர்களின் சூ கால்கள்!
தெருவின் விரை மீது!
ஊன்றி ஊன்றி மிதிக்கும்!
ஜீப் வண்டிகளின்!
டயர் தடங்களில் நசுங்கிய!
கைப் பாவைகளைக் கேட்டு!
எந்தக் குழந்தை என்றாலும்!
அழுது வடிந்து கொண்டிருக்கும்!
முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு!
தெரு நாய்கள் குரைத்து குரைத்து!
அச்சம் எழுப்பி!
தெருவெல்லாம் கதறி ஓடும்!
90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள்!
உடல் கொடுகி விழி நிமிர்ந்து!
கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும்!
உரமாக விதைக்கப்பட்டவர்களின்!
குருதி சொட்டிய பரள் மண் துகள்கள்!
எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும்!
விழுந்து கரிக்கும்!
ஒரு ஊசாட்டமும் இல்லை!
கைகளும் கண்களும்!
கறுப்பு துணியால் கட்டபபட்டு!
சும்மா கிடந்தது தெரு!
மார்பில் இரும்பு துப்பாக்கிகள்!
அழுந்தியிருக்கவில்லை!
'நீல' வானத்தில் பறவைகளின்!
சஞ்சாரம் அறவே இல்லை பின் அந்தி 6.00 மணிக்கு!
எங்கள் விளையாட்டு திடல்களில்!
யுத்த விதை விழுந்து மண் பிளந்து!
வேர் கொண்டு எழுந்த நாட்களில்!
ஒன்றா இது!
1999ல் பயத்தோடு விளையாடி கழித்த!
முன் இரா ஒன்றில்!
'ஜஃபர் மச்சான்' இனம் தெரியாத!
இரண்டு பேரால் சுட்டு கொல்லப்பட்டார்!
அவர் மெளத்தாகி கிடந்த!
மஞ்சோண்ணா மர நிழல் மட்டும்தான்!
அவர் மரணத்திற்கு சாட்சியாய்!
இருந்தது!
பின் அதையும் கதற கதற!
சுட்டு கொன்றுவிட்டார்கள்!
ஸமான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.