14 மார்கழி 2008.!
பாக்டாட்டில் செருப்புக்கு சிறகு முளைத்த நாள்!
இன்னும் 33 நாட்களுக்கான அமெரிக்க அதிபரை!
சொல்லப்போனால் ஒரு போர் எசமானனை!
சீண்டியது செருப்புப் பறவை.!
பத்திரிகையாளர் மாநாட்டில் நடப்பட்டிருந்த!
அமெரிக்க தேசியக்கொடியிடை சிறகடித்து!
மோதி விழுந்தது அது.!
ஒரு செய்தியின் வியாபகம் எழுந்தது,!
அதிலிருந்து.!
பேனாக்களின் வலிமை செருப்புக்கும் இருக்கிறது என!
நினைவூட்டினான் ஒரு பத்திரிகையாளன்.!
மாபெரும் மனித அழிவின் அலறல்களினதும்!
சிதைக்கப்பட்ட ஒரு பூமியினதும்!
இடிபாடுகளினுள் கூடுகட்டிய பறவை அது.!
போருக்கான வியாக்கியானங்கள் தன்னும்!
பொய்யாகிப் போனபின்னும்!
ஈராக் எரிந்துகொண்டுதானிருக்கிறது.!
எண்ணை வளம் அந்தப் பூமிக்கு!
போரை பரிசாக வழங்கியிருக்கிறது!
பதவி அழியமுன், எடுத்துச் செல்!
எங்களது இந்த இறுதி முத்தத்தை என,!
அவமானகரமான உனது முகத்தில் அறைந்துசொல்கிறோம்!
எங்கள் தணியாக் கோபத்தினை என!
செருப்புப் பறவை எடுத்துச் சென்ற சேதி!
வரலாற்றில் அழிக்கப்பட முடியாததாய்!
சொல்லப்பட்டாயிற்று, இரட்டைக் கோபுரத்தின் மீதான!
விமானப் பறவையின் மோதல்போல்.!
இந்த செருப்புப் பறவையின் முத்தம்!
விடைபெற்றுப் போகும் அதிபருக்கு மட்டுமானதா அல்லது!
பதவியேற்கப்போகும் அதிபருக்குமானதா என்பதை!
தீர்மானிக்கும் நாட்கள்!
எதிர்பார்ப்புகளுக்குரியன.!
-ரவி!
(17122008)
ரவி (சுவிஸ்)