நட்பு - புலவர் சா இராமாநுசம்

Photo by Tengyart on Unsplash

உடுக்கை இழந்தவன் கைபோல-துயர்!
உற்றால் நண்பனும் உடன்சால!
தடுக்கத் தானே முன்சென்றே-உதவி!
தந்திட வேண்டும் அஃதொன்றே!
இடுக்கண் களைதல் நட்பென்றே-குறள்!
இயம்பிய கருத்தும் மிகநன்றே!
எடுப்பின் நட்பில் முடிவொன்றே-பெயரும்!
எடுப்பார் பிரியா இணையென்றே!
உணர்ச்சி ஒன்றே நட்பாகும்-இருவர்!
உள்ளம் ஒன்றின் பொட்பாகும்!
புணர்ச்சி பழகுதல் வேண்டாவே-இது!
புரிந்தால் போதும் ஈண்டாவே!
தளர்ச்சி இன்றி நடைபோடும்-நட்பு!
தமிழ்போல் அழியா நிலைநாடும்!
வளர்ச்சி காணும் எழுமதியாம்-தேய்வு!
வாரா என்றும் முழுமதியாம்!
நவில்தொறும் நூல்நயம் போலுமென-நல்!
நட்பினைச் சொல்லல் சாலுமென!
பயில்தொறும் பண்புளர் தொடர்புயென-அவர்!
பழகினால் அவர்பால் ஆகும்மென!
முகநக நட்பது நட்பல்ல-நண்பர்!
முறையின்றி நடப்பின் தடைசொல்ல!
அகமது மலரல் நட்பென்றே-ஐயன்!
அறைந்ததை அறிவீர் நீரின்றே
புலவர் சா இராமாநுசம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.