புத்தம் புதுசாக
புலன்சிலிர்த்துப் பூரிக்க
ஆசைமனம் முழுக்க
ஆனந்தம் தளும்ப
நேற்றைய கனவில் காட்சியாய் விரிந்தது
பத்துப் பதினைந்து ஆண்டுகள் முன்னால்
அருவிக்கரையில் நீ கொடுத்த முத்தம்
என்னை உறங்க வைத்த
அந்த நாள் கனவு அது
உதடு குவித்து நெருங்கிவந்த
உன்கண் பார்வையில்
குருதிக் கடல்பொங்கி
உடலின் கரைமோத
கிசுகிசுப்பே மொழியாக
கிறுகிறுத்து நிலைகுலைய
காற்றில் படபடக்கும்
கொடித்துணியாய் நடுங்கும்
உன்நாவின் நுனி தீண்டி
ஈரம் படிந்த என் உதடு
என்கனவில் இருந்த நீ
என்னிடமிருந்து மெல்ல நழுவி
உன்கனவில் திளைப்பதற்கு
உனக்கான வெளியை
உருவாக்கிக் கொண்டாய்
வட்டநிலா வெளிச்சத்தில்
வான்நோக்கி மல்லாந்து
கனவில் திளைத்திருக்கும் உன்னை
கண்டிருக்கிறேன் பலமுறைகள்
உன் கனவில் ஒரு கனவு
அக்கனவில் மறுகனவு
காலம் நெடுக நீள்கிறது
கனவுச் சங்கிலிக் கண்ணிகள்
உலகம் முழுதும் கனவுகள் விரிய
கனவுகளின் வெளியில்
கரைந்துள்ளன பல சித்தரிங்கள்
ஓயாத சித்திரங்களின் அசைவில்
உற்சாகம் பொங்க
சோதிடக் கிளிபோலத்
தொட்டுத் தள்ளுகிறது
ஆதிக்கனவில் விரிந்த
ஆதிமுகம் காணும் ஆவல்
கலைந்த காலத்தின் தடத்தில்
முடிவற்றுச் சரிந்து பொருகும் முகங்கள்
வெல்லும் எனது கிளர்ச்சியில்
நாளும் தொடரும் என்முயற்சி

பாவண்ணன்