முட்செடிப் பூக்கள் - கீதா மதிவாணன்

Photo by Jr Korpa on Unsplash

பச்சை வானில்
மஞ்சள் நட்சத்திரங்களாய்
மலர்ந்து சிரிக்கின்றன,
எனக்குப் பிடிக்குமென்று
தோட்டத்து மூலையில்
அம்மா வளர்த்துவரும்
டிசம்பர் பூக்கள்!

முட்செடியொன்று
புதராய் மண்டிவிட்டதென்று
அரிவாளெடுக்கும் ஒவ்வொரு முறையும்
அப்பாவிடம் போராடி
வெற்றி பெறுகிறாள் அம்மா!

என் கூந்தலில் குடியேறிய
குண்டு மலர்ச்சரம் கண்டு
தோழியர் சிலாகிக்க,
தினம் தினம் முள் தைத்து
ரணமான அம்மாவின் கரங்கள்
நினைவுக்கு வர,
சூடிய மலரின்
கனம் தாளாததுபோல்
தலை கவிழ்கிறேன் நான்,
குற்றவுணர்வை என்னுள் மறைத்தபடி
கீதா மதிவாணன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.