தழுவும் ஈரக்காற்றில்
இலைகளை உதிர்த்தவண்ணமிருகின்றன
மிக உயர்ந்த யூகலிப்டஸ் மரங்கள்.
யாருமற்ற தெருக்களில்
அலைந்து தொலைகின்றன வெள்ளை நிழல்களும்
கருத்த மழை முகில்களும்.
எங்கிருந்தோ வந்து
எனைக் கடந்தபடி இருக்கின்றன
பெரிய நீல வண்ணத்துப்பூச்சிகள்.
குடைகளுக்குள்
யாரோ பேசியவாறு போகிறார்கள்
எதையோ.
மழைநீர் கோர்த்த
பசுந்த கிளைகளை உலுக்க
சிதறுகிறது
குளிர்ந்த கின்னர இசையொன்று.
இன்றும் சந்திக்க நேருகிறது
நீயற்ற வேளைகளை.
யாரிடமும் பேச தோனுவதில்லை.
சூழும் தனித்த இரவை
தடுத்து நிறுத்த வழியேதுமின்றி நானிருக்க
சன்னல் கண்ணாடியில் மழைநீராய்
உருகி வழிகிறது இம்மாலை மழை நேரம்

நளன்