கடவுள் - ச.பாலா

Photo by Jr Korpa on Unsplash

இரகசியங்களின் இரகசியக் காப்பளனே!
உன்னிடம் தான் எத்தனை
விடை தெரியா வினாக்கள்!

உயிர்த் தோழனின் இடரறிகையில்
உள்ளமே  உறைகிறதே!
உலக மக்களின் குறை கேட்கும்
உன் உள்ளம்?
ஓ! அதான்
கல்லாய் நீ காட்சி தருகின்றனையோ?

தன்னம்பிக்கையை விட
உன்மேல் நம்பிக்கை வைத்து
வாழும் பாமரர்கள் பல்லாயிரம்!
தங்கள் உடல் வருத்தி
இவர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன்கள்தான்
உன் விருப்பமா?
எங்கள் உடல் வருந்தினால் தான்
உன் அகம் குளிருமோ?

என்ன ஒரு கடவுள்!!

பாவமன்னிப்பு வழங்கும்
பரமபிதாவே!
‘ஒரு பாவத்தின் விலை என்ன?’
என்று மேலும் மேலும்
பாவம் செய்யும் தீயவர்களுக்கும்
பாவமன்னிப்பா!!

போலிச்சாமியார்கள்,
சாதிக்கலவரங்கள்,
இயற்கை சீற்றம்
போன்ற  சமயங்களில்
உன் மேலுள்ள
அவநம்பிக்கை மேலும்
வழுப்பெறுகிறதே!!

புராண காலங்களில்
பிறப்பெடுத்த நீ,
இந்தக் கலியுகத்திலும்
பிறப்பெடுத்து எங்களை
நல்வழிப்படுத்தலாமே!!

உன்னை வணங்க
நினைக்கும் ஒரு நொடிப்பொழுதில்
இத்தனை வினாக்களா?
இதற்கு எங்கள்
தேர்வு வினாத்தாள்
எவ்வளவோ மேல்!!

நீ இருப்பது
உன்மையெனில்,
ஒரு வகையில் நன்றி
சொல்ல விழைகிறேன்!
எனக்கு கிடைத்த
நண்பர்களுக்காக!!!

இறுதியில் உன்முன்
கோவிலில் நிற்கிறேன்.,
கடுகளவு நம்பிக்கையின்
காரணமாய்!

அருகில் சிறு குழந்தை ஒன்று
என்னைப் பார்த்து
‘பூ மொட்டின் புன்முறுவல் போல’
புன்னகை பூக்கிறதே!
ஓ! அக்குழந்தையின்
உருவில் நீ யா?
அக்கள்ளம் கபடமற்ற
புன்முறுவல்தான்
உன் ஆசிர்வாதம?
ஐயோ!!
மீண்டும் ஒரு வினா
வந்துவிட்டதே!!”

உன்னிடம் தான் எத்தனை
விடை தெரியா வினாக்கள்!
இன்னும்
ச.பாலா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.