எனக்குள் உருவாகும் வலிகள்!
என்னால் உருவானதல்ல!
உன்னால் உருவானது!
உன்னை உணர்ந்ததால் உருவானது!
உன்னை பார்க்கும் நிமிடம்வரை!
நந்தவனத்தில் நடைபயிலும் குழந்தையாக!
கனமில்லாத காகிதமாக !
காற்றில் பறந்து கொண்டிருந்தேன்!
உன்னை என் கண்கள் சந்தித்த நிமிடம் முதல்!
கரைபுரண்டு ஓடும் அலை கடலையும்!
ஓங்கி வளர்ந்த மலையையும் மடித்து!
மனதிற்குள் வைத்தது போல கனமாய் நான் !
மௌனமாய் உன்னை பார்த்தாலும்!
மனம் சத்தமாக பேசிக்கொண்டுதான் இருக்கிறது!
தென்றலாய் உன்னிடம் தவழ்ந்து கொண்டிருந்தாலும்!
புயலாய் கிளம்பி உன்னை புரட்டி போட துணிகிறது!
எனக்குள் இயல்பாய் வந்து அரங்கேறும்!
உள்ள நிகழ்வுகளை உள்ளபடி!
உன்னிடம் உரைக்க துணிந்தபின்னும்!
என் வார்த்தை தயங்கி நிற்கிறது!
வரையறை வகுத்து - என்!
வார்த்தைகளுக்கு தடைவிதித்து !
தடுத்து ஆட்கொள்ளும்!
வன்முறை செய்யும் இந்த சமூகம்!
ஆனாலும் உலையில் போட்ட அரிசியாய்!
உள்ளம் கொதித்து கொண்டுதானிருகிறது!
உடையவன் நீ வந்து - என்!
உள்ள நெருப்பை அணைக்கும் வரை ...!

கோவை. மு. சரளாதேவி