ஒற்றைக் கல் சுவரின் உச்சி..மௌனத் திரை வார்த்தைகள்.. ஜாடைத் தருணங்கள்..!
01.!
ஒற்றைக் கல் சுவரின் உச்சி..!
----------------------------------------!
சொற்களின் வழியே நீந்துதல்!
மொழியின் மூச்சுத் திணறலோடு!
மூழ்க செய்கிறது உடலை!
மழைக்குப் பின் கொடிக் கம்பியில்!
தொங்கும் துளிகளோடு!
நிகழ்த்தும் உரையாடல்!
ஈரப்படுத்துகிறது உதடுகளை!
மரணத்துக்கு நிகராகும்!
படிமமொன்றும் விறைத்துக் கொள்கிறது!
தன் கண்களை நிலைக்குத்தி!
ஒற்றைக் கல் சுவரின் உச்சியில்!
பதிந்து கிடக்கும் கண்ணாடிச் சில்லுகள்!
உடைத்துத் தூவுகிறது!
இக்கணத்தின் மீது தன் மாலை நேர வெயிலை!
!
02.!
மௌனத் திரை வார்த்தைகள்..!
----------------------------------------!
விரல்களோடு கோர்த்துக் கொள்ள!
ஏங்கும் ஸ்பரிசத்தை!
வெப்பம் இழைத்து நீவுகிறாய்!
கிறக்கத்தோடு நோக்கும் விழிகளைப் பருகி!
மௌனத் திரை அசையும்!
நிழலைப் பிடித்து உடலைச் சுற்றுகிறாய்!
வார்த்தைகள் பொத்தலிட்டு சல்லடையாய் வழிகிறது!
இதுவரை ஏற்றி வைத்திருந்த அர்த்தங்கள் யாவும்!
நீங்க மறுக்கும் முத்தப் பதிவுகளை!
ஒற்றியெடுக்கும் இதழ்கள் தயக்கத்தோடு பிரிகிறது!
காற்றில் உலர்ந்து!
நீ!
பிரிவோடு கையசைக்கும் கணத்தை!
உன்னோடு இழுத்துப் போகிறது!
உன் ரயில் !
!
03.!
ஜாடைத் தருணங்கள்..!
----------------------------!
அம்பறாத்தூணி!
முழுவதும் செருகி வைத்திருக்கிறாய்!
கூர் மழுங்கா!
புன்னகை அம்புகளை!
ஒவ்வொரு!
ஜாடைத் தருணங்களிலும்!
பிசகாமல் என்னை நோக்கி!
நாணேற்ற வளைகிறது!
உன்!
இதழ் நுனி

இளங்கோ -கவிதைக்காரன் டைரி