கருவறையே கல்லறையாய் - தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி

Photo by engin akyurt on Unsplash

தூளியிலிருந்து கொட்டின துளிகள்!!
தூக்கம் கலைந்து அழுதன தளிர்கள்!!
கொட்டியது சிறுநீர்த் துளிகளா? - அன்றி!
கொடிய சோகத்தால் விழிநீர்த் துளிகளா?!
பச்சை மண்ணுக்குப் புவிதந்த சரித்திரம்!!
பாழும் எய்ட்ஸால் வந்த தரித்திரம்!!
ஆட்கொல்லி நோயில்லா அன்னையாக!
அரவணைப்போம் ஓடி வா ஆருயிரே!!
விலைமாதரிடம் வாங்கிய வினையா?!
விதிவசத்தால் ஏற்றப்பட்ட குருதியா?!
சோற்றுக்கு வழியின்றி சோரம் போனாரோ?- உடற்!
சுகமே பெரிதென சுயநினைவிழந்தாரோ?!
பெற்றோரில் யார் செய்த குற்றம்?- எனப்!
புரியாது குழந்தை அழும் நித்தம்!!
கருவறை மழலைக்குக் கல்லறையா?!
கசியும் முலைப்பாலே கடும் நஞ்சா?!
யாரை எதுவெனக் குற்றஞ்சொல்ல?!
ஏதேனும் வழியுண்டோ எமனை வெல்ல?!
மலர்ந்ததுமே மடிகின்றோம் மழலை நாங்கள் - இனி!
மலடாகிப் போகட்டும் இம்மண்ணின் பெண்கள்!!
!
சிற்றின்ப உணர்வுகள் சிலிர்த்தெழும் நேரம்!
சீர்கெட்டு வழிமாறி சிதையாதீர் ஒருபோதும்!!
அற்ப சுகத்திற்கு வழிகாட்டி நண்பன் - தன்!
கற்பின் வழிநின்றுனைக் காப்பவள்தான் மனைவி!!
இனிவரும் காலமேனும் விடிந்திடுமோ? - அன்றி!
எப்போதும் இந்நிலைமை தொடர்ந்திடுமோ?!
எய்ட்ஸின் வைரஸே ஒழிந்துவிடு!!
எதிர்காலச் சந்ததியை வாழவிடு
தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.