ஊரில் இருக்கும் நண்பா நலமா?!
நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் என்று சொன்னாய்...!!!!
காசு கொடுத்து சந்தோசங்களை விலைக்கு வாங்கும் நான்!
சந்தோசங்களை விற்று காசை விலைக்கு வாங்க ஆசைப்படும் நீ!
எனக்கு சம்பளம் டொலர்களில்!
உனக்கு வெறும் ரூபாய்களில்!
ஆனால்....!
உனது சந்தோசங்களின் பெறுமதி டொலர்களில்!
எனது சந்தோசங்களின் பெறுமதி ரூபாய்களில்....!
உண்மையாக நேர்மையாக உழைத்தால் !
உனது மாத சம்பளம் தான்!
எனது மாத இறுதி சேமிப்பு!
இதுதாண்டா உனக்கும் எனக்கும் இப்போது வித்தியாசம்.. !
ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு!
நீ ஊரில இருந்தும் அகதி!
நான் சிற்றிசன் கிடைச்ச அகதி....!!!!
நண்பா....!
குச்சு ஒழுங்கைகளிலும் வெண் மணல் வெளியிலும்!
தொலைத்த சந்தோசங்களை!
இங்கே அதிவேக வீதிகளிலும் !
சீமெந்து காடுகளிலும் தேடுகிறோம்.!
நான் நேரத்துக்கு நித்திரை கொண்டு நான்கு வருடங்கள்....!
நிம்மதியாய் நித்திரை கொண்டு ஆறு வருடங்கள்...!!!!
இதையே வைரமுத்து பாட்டில் சொன்னால்!
மண்டையை மண்டையை ஆட்டிக் கேள்!
சங்கர் படமாய் எடுத்தால் விசிலடித்து கைதட்டு!
உன் ”நண்பன்” நான் சொன்னால் மட்டும்!
கொடுப்புக்குள் சிரித்து நக்கல் அடி..!!!!
கனவுகளை விற்று நித்திரைகளை விலைக்கு வாங்காதே!
விரல்களை அடைவு வைத்து தூரிகைகளை!
வட்டிக்கு வாங்காதே....!!!!!
நண்பா!
டொலர்களை அனுப்புகிறேன்!
சில்லறைகளாய் தொலைந்து போன என் சந்தோசங்களை!
வாங்கி அனுப்பு
தமிழ்ப்பொடியன்