இன்று 'இடியுடன் கூடிய மழை '
பொழியுமென மொழிகிறது
வானிலை அறிக்கை
புகலிட வாழ்வினுள் சபிக்கப்பட்ட நாளில்
நான் நனையப் பெய்ததில்லை
மழை
பால்யத்து மழைநாட்கள்
பெய்யெனப் பெய்கிறது
இன்றும்
*
காலத்தின் உக்கிரத்தில்
வான் கிழிந்து கொட்டியது
பெருமழை
தவளைகள் புணரக்கிளர்த்திய
ஒலியும்
அம்மாவின் சேலையுள் குடங்க
கணண்ற உடற்சூடும்
உறங்கப்போறேன்
மறுநாள் பள்ளி
அரைநாள் விடுமுறை
வீடுதிரும்பு வழியில்
சுடலைவெளி நிறைய வெள்ளம்
முழந்தாள் தாண்டி
அரைக்களிசான் விளிம்பெல்லாம்
ஈரம்
நீரிலாடி நேரங்கழித்து
வீட்டுள் நுழைகிறேன்
முதுகில் உறைக்கிரது
'பூவரசம்பழம் '
நினைவிடை நான் நனைய
*
மறுமழை
மூன்றுநாட்கள் அடைமழை
மேட்டுக்குடி ஒழுங்கை
நீரோடி
வெள்ளவாய்க்காலாதல் இழுக்கென்று
அணையிட்டு நீர் அடக்க
நிறைந்து கிடக்கிறது வளவு
தலைவாசல் படிதாண்டி உள்நுழைய
ஒரு விரலிடை இருக்கையிலே
மழை ஓய
அடுப்பில் உலையேற்றி
அரிசிவாங்கிவர ஓடுகிறாள்
அம்மா
வாசல்படியிருந்து
கப்பல் மிதக்கவிட்டு
களியுற்றிருக்கிறோம்
மறுபாட்டம் சொரிகிறது
வானம்
அம்மாவும் இல்லாத் தனிமை
நீரெழுந்து படிதாண்டி உள்நுழைய
ஊர்திரண்டு அணை வெட்டி
சிறை மீட்கப் பதிகிறது
நெஞ்சில்
*
ஊழி தொடங்கி ஊரெரிந்தபோதில்
பொழிந்து
மூன்றாம் மழை
தீயின் விழுதுகளுள் விலகி
பெடியளுக்கு
மண்ணெண்ணை தேடி
வெள்ளாங்குளம் போவதாய்
போக்குக்காட்டிவிட்டு
சங்குப்பிட்டித்துறையில் படகிற்கு
காத்திருக்கிறேன்
பெருவளி
நடுநிசி
மனிதர் வரிசை
துறையின் திசைநீள
துவக்கொடு அலையும் மைந்தர்
உயரக்காற்றில் எழுகிறது
ஹெலியொலி
கிலியில் உரைகிறது குருதி
திடாரென
வானம் கருக்கொண்டு
பெருந்துளிகள் சொரிய
குலைகிறது மனித ஒழுங்கு
ஒதுங்க நிழலற்று
உடல் விறைத்து
தெப்பமாய் நனைந்திருக்கிறேன்
ஒரு மணி கழிய
வானில் பூக்கிறது வெள்ளி
வயிற்றில் பூக்கிறது பசி
பிரிவின் துயரொடு
காதற்துணைவி கண்ணீர் கலந்து
கட்டிய பொதிசோற்றில்
கையை நுழைக்கிறேன்
மழைநீர் கலந்து நெக்குருகி
கிடக்கிறது சோறு
கூடவே மனசும்
பால்யத்து மழைநாட்கள்
பெய்யெனப் பெய்கிறது
இன்றும்
திருமாவளவன்