கறுப்புத் துணி மூடுகிற நகரம் - தீபச்செல்வன்

Photo by Marek Piwnicki on Unsplash

பழாய்ப்போன சனங்களுக்கு எதிராகவும்!
முகம் சுழிக்க வேண்டியிருக்கிறது.!
சனங்கள் என்ன செய்ய முடியும்?!
முதுகுகள் எங்கும்!
துவக்குகள் குத்தயபடியிருக்கின்றன.!
விலக்க முடியாத பேரணியில்!
சொல்லித்தரப்பட்ட வாசகங்கள்!
முழுவதுமாய்!
நமக்கு எதிராய்!
நமது வாயில் ஒலிக்கின்றன.!
திணிக்கப்பட்டிருக்கிற கொடியின்!
பற்களுக்கிடையில்!
சிக்கித்தவிக்கிற தேசத்தின் வெற்றிக்கு!
நமது சகோதரர்களாலே!
பரணியெழுதப்படுகிறது.!
சனங்கள் தமது சனங்களுக்கு!
எதிராய் கிளப்பப்படுகின்றனர்.!
துப்பாக்கி எல்லாவற்றையும்!
ஆண்டு கொண்டிருக்கிறது!
அதிகாரம் எல்லாவற்றையும்!
மாற்றி அமைக்கிறது.!
ஒடுங்குகிற சனங்களின்!
வார்த்தைகள் நசுக்கப்படுவதற்கு!
சனங்களையே திரட்டப்படுகிற நகரத்தில்!
எதிரியின் அதிகார மொழிப்பாடல்!
காதை கிழித்தொலிக்கிறது.!
நாம் பாடலின் அர்த்தத்தை!
புரியாதவர்களாயிருக்கிறோம்.!
கறுப்புத்துணிகளால்!
மூடுண்டு வாழுகிற நகரத்தின்!
தலைகள் ஆடுகிறபோது!
துப்பாக்கிகளே பேசுகின்றன.!
சொற்களற்ற நகரத்தில்!
மனிதர்கள் துண்டிக்கப்பட்டு!
திரட்டப்படுகின்றனர்.!
பழாய்ப்போன சனங்களின்!
கையில் திணிப்பதையெல்லாம்!
பார்வையிடுவதற்கு முன்பே!
படம் பிடிக்கப்படுகின்றனர்.!
எல்லோருடைய கால்களும் உருகுகிறது.!
கறுப்புத்துணி தலைகளை தின்று விடுகிறது.!
முண்டங்கள் திரியும் வீதியில்!
அடிமைக்கு வலுவான!
வாசங்கள் தொங்குகின்றன.!
அதிகாரம் தனது வெற்றியை!
திணித்துவிட்டு!
அடிமையை கட்டாயம் செய்து தருகிறது.!
வீதியை கடக்கிற அவகாசத்தில்!
விடுதலை மறக்கிறது!
நாடு மறக்கிறது!
கறுத்த நகரத்தின் சந்தையுடன்!
வாழ்வு முடிகிறது.!
நமது கண்களை நாமே!
பிடுங்குவதைப்போலவும்,!
நமது உடலை நாமே!
கூறிடுவதைப்போலவும்!
அதிகாரம் எல்லாவற்றையும்!
எல்லாரையும் பிரித்தாழுகிறது.!
பாம்புகள் வழிகாட்டுகிற வீதியில்!
தொன்மையான சொற்கள் பலியிடப்பட!
முகங்களை குத்துகிற வாசங்கள்!
எழுதித்தரப்பட்டிருக்கின்றன.!
எனது பாழாய்போன சனங்களே!
துவக்குள் சுட முடியாத!
என்றைக்குமான எல்லாவற்றுக்குமான மனது!
விலக்க முடியாத பேரணியில்!
மிதிபடுவதை கண்டு செல்லுங்கள்.!
கடைசியில் உணவில் விஷமிருக்கிறது!
படுக்கை சுடலையாகிறது.!
எழுதித்தரப்பட்ட வாசங்கள்!
தூக்கத்தில் கொலை செய்துவிட்டு போகிறது.!
பழாய்ப்போன சனங்களுக்கு எதிராகவும்!
முகம் சுழிக்க வேண்டியிருக்கிறது.!
அதிகாரம் எல்லாவற்றையும்!
தனக்கு ஏற்றமாதிரி மாற்றியமைக்கிறது.!
சனங்கள் என்ன செய்ய முடியும்?!
-தீபச்செல்வன் !
--------------------------------------------------------------------!
28.12.2008. யாழ்ப்பாணத்தில் மக்கள் சிலர்!
இலங்கை அரசின் வன்னி இராணுவ நடவடிக்கைகு ஆதரவாக பேரணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.!
-----------------------------!
தீபம் பதுங்கு குழியிலிருந்து ஒரு வலைப்பதிவு!
தீபம்
தீபச்செல்வன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.