ஏழெட்டு மாசமா!
எங்கூரில் மழையில்ல!
யாரு செஞ்ச குத்தமுன்னு!
யாருக்குமே தெரியல்ல!
சமைக்கத் தண்ணியில்ல!
தொவைக்கத் தண்ணியில்ல!
குளிக்கத் தண்ணியில்ல!
குடிக்கத் தண்ணியில்ல!
ஊருணியும் மணலாச்சு!
ஒலந்த மீன் முள்ளாச்சு!
தூரெடுத்தும் கெணத்திலே!
துளிக்கூடத் தண்ணியில்ல!
குச்சிமகா காளியம்மன்!
கோவிலிலே பூசாரி!
நச்சுன்னு ஒடச்ச தேங்கா!
ஒண்ணுலயும் தண்ணியில்ல!
போரு கொழாய்த் தண்ணி!
போட்டுவெச்ச சீமாங்க!
மனசிருந்தா வாம்பாங்க!
மாறுபட்டாச் சீம்பாங்க!
தாகத்தைத் தீத்து வெக்க!
இளனியில்ல நொங்குமில்ல!
பாவத்தைக் கழுவக் கூட!
பச்சத் தண்ணி எங்குமில்ல!
நஞ்சையும் புஞ்சையாச்சு!
புஞ்சையும் புழுதியாச்சு!
பஞ்சப் பாட்டையெல்லாம்!
பத்திரிக்கை எழுதியாச்சு!
தேர்தலுக்கு வந்த கட்சி!
தேறுதலுக்கு வரவுமில்ல!
ஓட்டு வாங்கிப் போனவங்க!
ஒத்தாசை தரவுமில்ல!
வேலி கொவ்வாக்கொடி!
வெக்கையில காஞ்சிருச்சு!
காரச் செடி சூரச் செடி!
கருமுள்ளாத் தேஞ்சிருச்சு!
உசல மரம் புங்க மரம்!
மஞ்ச நெத்தி ஈச்ச மரம்!
உசிரு போற வெய்யிலில!
ஒலகத்த வெறுத்திருச்சு!
புரவ ஆட்டுத் தீனிக்கு!
புல்லுமில்ல பொதருமில்ல!
தொரட்டி எட்டும் தூரத்திலே!
மரத்து மேல தழையுமில்ல!
முட்டிபோட்டு வால்துடிக்க!
முட்டிமுட்டி பால்குடிக்க!
குட்டி ஆடு பசி அடக்க!
சொட்டுப்பாலும் சொரக்கலயே!
முண்டக்கண்ணி சாவலுக்கும்!
தொண்டத்தண்ணி வத்திருச்சு!
விடிஞ்சாத்தான் என்னன்னு!
கால் நீட்டிப் படுத்திருச்சு!
குறி சொல்லும் சோசியனும்!
தலையில அடிச்சுக்கிட்டான்!
கிளி செத்துப் போச்சுன்னு!
கடைய அடச்சுப்புட்டான்!
கால்ஊனி கால்மடிச்சு!
நாலாய் நின்ன கொக்கு!
வீசா வாங்கிக் கிட்டு!
வெளிநாடு போயிருச்சு!
அறுவடைய நம்பித்தான்!
நடக்குதுங்க விவசாயம்!
பருவமழை தவறிப்புட்டா!
குடுத்தனமே கொடைசாயும்!
தண்ணிபட்ட பாடாத்தான்!
தவிக்குதுங்க இடையபட்டி!
வருண கருண பகவானே!
வந்திருங்க நடையக்கட்டி
ரவி அன்பில்