எதற்கழுகிறோம்? - நளாயினி தாமரைச்செல்வன்

Photo by Pete Godfrey on Unsplash

காலத்தின் கடமையை
எட்டி உதைத்துவிட்டு
ஒராயிரம் மைல் கடந்தோம்.

எங்கள் வலிகளை
தூக்கி இறக்கி வைக்க
வலுவான வார்த்தைகள்
இல்லைத்தான்.

நறுமண ஞாபக
குவியல்களும்
உங்கள் வலிகளின்
முனகல்களும் தான்
எங்களை வாழச்சொல்கிறது.

முகாரிகளுக்குள்ளும்
உறைபனி முகடுகளுக்குள்ளும்
எம் உணர்வுகளை
முக்காடு போட்டு
மறைத்துக்கொண்டாலும்
எல்லாம் பொய்த்து விடுகிறது.


சில செயல்கள்
எதற்காக செய்கிறோம்
என்றே தெரியாமல்
பல தடவை செய்தாச்சு.

அடுத்த முறை இப்படி
செய்யக் கூடாது என
மனது சப்தமின்றி
சத்தியம் செய்தாலும்
ஏதோ செய்துதான்
தொலைக்கிறோம்.

வண்ணாத்துப்பூச்சியை
தும்பியைப்பிடித்து
சின்ன வயசில்
சிரச்சேதம் செய்தவர்கள்-நாம்

சின்ன குருவி ஒண்டு
சாகப்போறதைப்பார்த்து
காப்பாத்துங்கோ
காப்பாத்துங்கோ
என அரற்றிய என்னை
இழுத்துப்பிடித்து
என்ன நடந்தது உங்களுக்கு
என்கிற போது தான்
சுய நினைவுக்கு வந்திருக்கிறோம்

நறுமண ஞாபக குவியல்களுக்குள்
உங்கள் ஆறா வலி முனகலுக்குள்
அடிக்கடி மூழ்குவதால்
சுயநினைவை இழக்கின்றோம்.

ஆனாலும் என்ன
வண்டில்காரன் தூங்கிவிட்டால்
மாடு பத்திரமாய்
வீடுவந்து சேர்வது போல்
எம் நாளாந்த கடமைகள்
அத்தனையும் நடக்கத்தான்
செய்கிறது

அருகில் வந்து
யாரும் கதை கேட்டால்
உணராது
என்ன செய்கிறாய் என
கரம் ஒன்று தொடும்போது
மட்டுமே திடுக்கிட்டு
விழித்துநிற்போம்.
அழும் விழிகளுடன்.

பயத்தில் அழுகிறோமா?
நினைவால் அழுகிறோமா?
வலிமுனகலால் அழுகிறோமா?
இந்த வெள்ளையர்க்கு
எங்கள் சோகம் எப்படி
புரியும் என நினைத்து அழுகிறோமா?
தலைசாய்த்து நாம் ஆற அருகில்
ஓர் மடி இல்லையே என அழுகிறோமா?

எதற்கழுகிறோம்?
இன்னும்தான் புரியவில்லை
நளாயினி தாமரைச்செல்வன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.