உதடுகளுக்கு மத்தியில்
உட்கார்ந்திருந்தாலும் எப்போதும்
உதட்டளவு உறவல்ல
உயிர்வரை செல்லும்
உன்னத நட்பு இது.
உயிர்வரை என்ன
உயிரே செல்லும் என்கின்றனர்
உறவினர் சிலர்.
உண்மைதான் -- ஒருநாள்
உதடுகளால் முடியாது
உள்வாங்கவோ
உமிழ்ந்து துப்பவோ.
எனினும்
எனக்குப் பிடித்தமானதோ
பற்றி எரியும் வாழ்க்கைதான்.
நனைந்து போனதோ
அணைந்து போனதோ அல்ல.
மேலும் என் எண்ணங்களின்
பூஜ்யங்களுக்கும் பாம்புகளுக்குமான
புகையான தமிழாக்கம்
மற்றும் இளஞ்சூடான இறப்பு.
ஏனெனில்
சாம்பல்கள்
தீயின் குழந்தைகள்

நாகூர் ரூமி