வழக்குண்டு! !
-------------------------------------------------------!
முப்புரம் எரித்தவனே!
முக்கண் விநாயகனே!
மூத்தவனைக் கோபித்த!
எந்தன் கடம்பனே!
சிவனின் பாதியே!
சின மிகு காளியே!
கோவில் காத்து நிற்கும்!
வைரவேனே, மாடனே!
முக்கோடி தேவர்களே!
முனிகளே பரிவாரங்களே !
வாருங்கள் எந்தன்!
வழக்காடு மன்றுக்கு!
நில்லுங்கள் அங்கே!
எனக்கொரு வழக்குண்டு !
பாலும் பசுநெய்யும்!
பழமும் பன்னீரும்!
பட்டுங் குஞ்சரமும்!
பறித்தெடுத்த புதுப் பூவும்!
கொட்டும் விபூதியும்!
குளிர்க்க வைக்கும் அபிசேகமும்!
நாவினிக்கும் தமிழ்ப் பாவும்!
நாழிக்கொரு பூசையுமாய்!
உங்களுக்கு நாங்கள்!
என்னதான் குறை வைத்தோம்? !
சம்பந்தன் பாக் கொண்ட!
கேதீச்சரத்தானே!
பேடுடன் விடையேறி!
பேருலா நீ வந்த வீதியெல்லாம்!
எருதுடன் எமை வெட்டுகையில்!
நெற்றிக் கண் திறந்து!
நெடுமென நின்ற ஈசா!
முப்புரம் எரித்த தீயில்!
மூன்று பொறி கிடைக்கலையா? !
பசிகொண்ட சம்பந்தன்!
இசைகூட்டி அழுத போது!
ஞானப் பால் கொண்டு!
விடையேறி வந்தவளே!
பிஞ்சு நடை பயிலா வீட்டில்!
பிச்சை மறுத்த சிவனே!
பசி கொண்ட என் குழந்தை!
செத்த தாய் மடி உறிஞ்சிய போது!
வானுக்கும் மண்ணுக்குமாய்!
ஏன் உங்கள் பசு பறக்கவில்லை? !
நாலு வீதியில் பந்தலிட்டு!
நாம் தேர் இழுத்த பாதைகளில்!
நாயாய் என் சனம்!
நாதியற்றுச் சாகையிலே!
நல்லூர்க் கந்தா!
எந்தப் படை வீட்டில் நீ!
எத்துணைவி துணையிருந்தாய்? !
கற்பூரச் சட்டியிலே தான்!
காணிக்கையாக எரிந்த மகள்!
கற்புக்காய் எரிகையிலே!
கற்பூர நாயகியே கனகவல்லி!
எங்கு போனாய்? !
நயினையின் தேவியளே!
தெல்லிப்பளை துர்காவே!
வற்றாப்பளை குடிகொண்ட!
மார்பு திருகி மதுரை எரித்தவளே!
என் தேசம் அழிகையிலே!
எங்கேயம்மா உங்கள் சூலங்கள்? !
பாய் விரித்து மடை கொட்டி!
பால் நிலவில் உனைப் பணிந்து!
கோவில் காப்பது போல் எம்!
கோட்டை காக்கக் கேட்டோமே!
கோப வைரவனே!
நீயுமேன் வரவில்லை? !
ஐயோ ஐயோ என்று!
அலறித் துடித்தோமே!
எரியுதே என் தேசம்!
ஈசா வா என்றோமே!
படைத்தவன் படி அளப்பான் என்று!
பட்டினியில் செத்தோமே!
எங்கு போனீர்கள்!
ஏன் ஒருவருமே வரவில்லை? !
என் தாய் எனக்குத் தந்த!
பாலின் மேல் உரிமை இருந்தால்!
அவளூட்டி வளர்த்து விட்ட!
என் தமிழ் மேல் உரிமை இருந்தால்!
சைவத்தையும் தமிழையும்!
கண்களாக்க உரிமை இருந்தால் !
அந்தக் குருதி மேல் ஆணையிட்டு!
என் தமிழின் மேல் ஆணையிட்டு!
முக்கண்ணா நீ படைத்த!
மூவுலகின் மேல் ஆணையிட்டு!
அழைக்கிறேன் உங்களை; !
வாருங்கள் கடவுள்களே!
நில்லுங்கள் அங்கே!
எனக்கும் உங்களுக்கும்!
நீண்டதொரு வழக்குண்டு
மயூ மனோ