பட்டுச் சிறகை விரிக்கின்றீர்!
பவள அலகால் கொறிக்கின்றீர்!
எட்டுத் திசையும் பறக்கின்றீர்!
இன்னிசைத் தேனைச் சுரக்கின்றீர்!
!
கேள்விக் குறிபோல் சிலமூக்கு!
கிளருங் கால்களில் உகிரூக்கு!
வாள்போல் அலகுடன் வாயாச்சி!
வான்வெளி பறப்பதும் ஆராய்ச்சி!
!
நெல்லிக் காய்போல் தலைகொண்டீர்!
நீள்மரக் கிளைகளில் துயில்கொண்டீர்!
பள்ளிக் குழந்தைகள் போலாகிப்!
பகல்வரு முன்னே பறக்கின்றீர்!
!
கையை விரித்துக் கால்மடக்கிக்!
கண்படுந் தூரம் பறந்துவிட்டு!
பையவே மண்ணில் இறங்குவதைப்!
பார்த்தே படைத்தார் வானூர்தி!
!
துமுக்கிப் பேரொலி கேட்டவுடன்!
துடித்துப் பறக்கும் பறவைகளே!
தமுக்கித் திரியா நற்குணங்கள்!
தாங்கிய நீங்களும் உயர்திணையே!!
!
கழுகைக் கண்டால் அஞ்சுகின்றீர்!
காதலில் குஞ்சினைக் கொஞ்சுகின்றீர்!
பழுதறி யாமல் வாழ்கின்றீர்!
பகுத்தறி வாளரை ஆள்கின்றீர்!!
!
-பாத்தென்றல் முருகடியான்
முருகடியான்