மனம் திறக்கிறேன் - உறுத்தலுடன்!
என் மனதை ஊனமாக்கும்!
விளங்காத வினாக்களை!
விளக்கிக்கொள்ள மனம் திறக்கிறேன்!!!
ஆயிரம் ஆயிரம் வினாக்கள்!
அழகான விடைகள் தேடி!
கேணியில் ஊறும் நீராய்!
கொட்டிக் கிடக்கிறது!!
தினமும் நாளேடு படிக்கும்போது!
தகாத செய்திகளை காண்கையில்!
குற்றம் புரியும் இவர்களுக்கு!
பகுத்தறியும் தன்மை இல்லையா? - என்று!!
தவமிருந்து உயிர்கொடுத்து பெற்றெடுத்து!
தரணியில் தன்னிச்சையாய் செயல்படவைத்த - தாயை!
முதுமையில் காப்பகம் அனுப்புகையில்!
மனசாட்சி மரத்து விட்டதோ?? - என்று!!
ஓர் வயிற்றில் உருவான உயிர்கள்!
நிலையில்லா நிலத்திற்காய் நிதர்சனமின்றி!
சண்டையிடுகையில் - உன்னதமான!
உறவுகளுக்கு உயிர்மை இல்லையா??? - என்று!!
ஈட்டியது காணாமல் இன்றைய பொழுதை!
கொஞ்சமும் மிச்சமில்லாமல் விரட்டும் உழைப்பாளரை!
காண்கையில் - கண்மறைத்து வித்தைகாட்டும்!
கறுப்புப் பணங்களை மீட்ட வழியில்லையா?? - என்று!!
ஊனுருக்கி உயிர்கொடுத்து ஓய்வில்லாமால்!
உழைத்து சேர்த்த பொருளுக்கு - கட்டிய வரியை!
கூச்சமின்றி கூட்டத்தோடு கொள்ளையடிக்கும்!
ஊழலுக்கு மரணம் ஏகுமா?? - என்று!!
பிறரின் உணர்வுகளை மதியாமல் - அவரின்!
தன்னிலை தெரியாமல் சுயநலம் போற்றி!
புற்றீசலாய் பெருகியிருக்கும்!
கையூட்டிற்கு காலன் இல்லையோ?? - என்று!!
இச்சமுதாயம் நமக்காகவா? - இல்லை!
நாம் இந்த சமுதாயத்துக்காகவா?!
விடையற்ற வினாக்களுக்கு!
விடை கிடைப்பதெப்போது???
மகேந்திரன்