உடந்தையா சொல் தாயே....? - க‌வித்தோழன்

Photo by FLY:D on Unsplash

துயர்சகித்து ஈன்றிந்தத் தரையினிலே உன்மகனை!
துயிலிழந்து துணைநின்று தோளினிலே தயங்கிநிதம்!
உயிர்மூச்சில் அவனுருவை உன்னதமாய்ப் பதித்திருந்தே!
உயரியதாய்ப் பணிபுரிந்தும் ஊதியம்தான் கேட்டாயா ?!
விடிகாலை புலருமுன்னே விரகொடித்து அடுப்பெரித்து!
வடிந்தோடும் வியர்வைதனை பொருட்படுத்தா நெஞ்சமுடன்!
படியேறிப் பலரிடத்தில் விற்பதற்காய் அப்பம்செய்து!
படிப்பித்தாய் உன்மகனை பிரதிபலன் கேட்டாயா ?!
கறையில்லாக் கல்விதனை முறையாகக் கற்றமகன்!
கரைசேர்ந்து ஓர்தொழிலில் கைநிறையக் காசுழைத்து!
நிறைவோடு நிம்மதியாய் வாழுவதைக் காணுகையில்!
நரைகூந்தல் கொண்டநீயோ பங்கெதுவும் கேட்டாயா ?!
பத்திரமாய் இத்தனைநாள் பாதுகாத்த மகனவனும்!
புத்துறவாம் இல்லறத்தில் இணைகின்ற போதுமட்டும்!
சொத்துபணம் லட்சமுடன் வீடதுவும் வேண்டுமென!
சத்தமி(ட்டு)ன்றி சீதனமாய் கேட்பதுவும் ஏன்தாயே ?!
எண்ணில்வரா சிரமங்களை ஏற்றுநீயும் தாங்கியது!
என்றிந்தும் சீதனமாய்க் கூலிகிட்டும் எனத்தானோ ?!
கண்கலங்கி வாழுமிந்தக் கன்னியரின் துயர்நிலைக்கு!
கண்ணியங்கள் கொண்டநீயும் உடந்தையா சொல்தாயே ?
க‌வித்தோழன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.