~ கரு. திருவரசு ~!
பார்வையிலோர் ஓவியமும் பவளவிதழ் சிரிக்கின்ற!
பான்மையிலோர் காவியமும் பதுமையென இருக்கின்ற!
சீர்மையிலோர் சிற்பமதும் செய்திடுவேன் அவையெல்லாம்!
சிந்திடுமோ மழலைமொழி சிறுகுழந்தாய் உனைப்போலே!
!
தடுமாறும் நடைகண்டு தரமான நாட்டியமும்!
தடதடெனத் தளிர்க்கைகள் தட்டுவதில் தாளங்களும்!
திடுமெனநீ அழும்போது தேனிசையும் கற்றிடலாம்!
சிறுதுயிலில் நின்முகப்பூ செய்நடிப்புத் திறம்வருமோ!!
!
சிந்தியமு துண்பதிலே சிறப்பீகைப் பெருங்குணமும்!
தந்தைக்கும் சடைநாய்க்கும் தரும்முத்தச் சமத்துவமும்!
உந்தியுந்தி முயல்வதிலே ஊக்கத்தின் உயர்வடிவும்!
உணர்ந்திடலாம்! உலகிலினி உன்பருவம் கிடைத்திடுமோ!!
!
கரித்துண்டால் கீறுவதில் கன்னியர்செய் கோலங்களும்!
பிரித்துவைத்து நூல்படிக்கும் பேரழகில் இலக்கியமும்!
சிரித்தழுது விழுந்தெழுந்து திரிவதிலே செயல்திறமும்!
தேர்ந்தாலு முனக்கிருக்கும் தெய்வமனம் அமைந்திடுமோ
கரு. திருவரசு