கன்னியே கவனம் - கலைமகள் ஹிதாயாரிஸ்வி இலங்கை

Photo by Peter Olexa on Unsplash

 
ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!

குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!

இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!

பாதை தனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!

காத லென்றால் கரும்பா வான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலோ விலகிடுவான்!

காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே
 
-கலைமகள் ஹிதாயாரிஸ்வி  இலங்கை
கலைமகள் ஹிதாயாரிஸ்வி இலங்கை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.