பிடிவாதம் பிடிக்கும்
செத்துப்போன
கணவனின் ஜாடையிலான
சின்னவளுக்கு
எவர்சில்வர் தட்டை
எடுத்துக் கொடுத்து
பெரியவனையும்
அவசரப் படுத்துவாள்
சீக்கிரம் போங்கலே
யாராவது வந்துரப் போராக
எழவு கேக்கதுக்கு
வீட்டைப்பூட்டித்
தெருவில் இறங்கியவள்
திரும்பி வந்து
நெற்றியில் பொட்டு வைத்து
விட்டோமோ என்று
போட்டாக் கண்ணாடியில்
பார்த்து
வெறும் நெற்றியை
அழுந்தத் துடைத்து
மறுபடி கிளம்புவாள்
டவுண்
டீக்கடைகளுக்கு தானே
பால் எடுத்துக்கொண்டு
பதினேழாம் நாள்