நடுச்சபை தன்னிலே
உடுக்கை இழந்தவள் - இருகை
எடுத்தே அழைத்தாலன்றி
இடுக்கண் களையேன் - என்று
வேடிக்கை பார்த்திருந்த
நீரெல்லாம் என்ன கடவுள்...!
கர்ணனின் கொடையையே
அவன் வினையாக்கி
அவன் வரங்களையே
சாபமாக்கி.
சூழ்ச்சியால் உயிர்பறித்த
நீரெல்லாம் என்ன கடவுள்...!
துரோணரை வீழ்த்திடப்
பொய்யுரைக்க செய்தீர்
ஆயுதம் ஏந்திடாவிடினும்
ஒரு பக்கச் சார்புடையீர்
இப்படி உம் குற்றப்பட்டியல்
கூடிக்கொண்டே போகிறதே
நீரெல்லாம் என்ன கடவுள்...!
அட.....
நான் மறந்து தான் போய்விட்டேன்
நீர் மனிதன் புனைந்த கடவுள் தானே
மனிதர்கள் கடவுள்களை சித்தரிக்கையில்
நரகுலத்துக்கே உரித்தான
நாலைந்து பண்புகளை
ஆங்காங்கே தூவித்தான் விடுகிறார்கள்
அந்தக் கடவுள்களே அறியா வண்ணம்

காருண்யா கதிர்வேற்பிள்ளை