உழவர் திருநாள் - சத்ய சுகன்யா சிவகுமார்

Photo by Julian Wirth on Unsplash

மண்ணில் பொன் செய்யும் ஏற்றமிகு கைகள்!
உணவுக்கொடை தினம் செய்யும் ஆற்றலுடைக் கைகள்!
இது பாட்டாளித் தொண்டனின் ஒப்பிலா உடைமைகள்!
இரந்து வாழ்தலைவிட இறந்து போகலாம் எனுமினத்தவன்!
நெற்றி வியர்வையை முதலாக்கி விளைச்சலைப் பிறர்க்களிப்பவன்!
இவன் அன்னபூரணன் தன்வாழ்வில் பூரணமே காண்பவன்!
கொடுப்பதைப் பெறுபவன் என்றும் பறிப்பதை அறியாதவன்!
உழவன் எனும் பெயர்க்கொண்டு பண்படுத்தி வாழ்பவன்!!
உழுவோரின் திறம் வியக்க சிரம் வணங்க!
தெய்வத்தைத் தெய்வமாகக் கரம்குவித்துக் கொண்டாடும் நாள்!
உழவர் புகழ் கூறும் உழவர் திருநாள்!
உழும் தெய்வத்திற்கு நான்கு நாள் உற்சவம்!
முதலில் மலர்வது போகி எனும் புனிதநாள்!
அல்லவற்றை போ!போ என விரட்டும் போகித்திருநாள்!
நல்லவற்றை வரவேற்க முனையும் உழவனின் உற்சாகப்பெருநாள்!
இந்நாள் முடிந்து வரும் நாள் தைத்திருநாள்!
தைதை எனத் தைமகள் ஆடி வந்து!
உழவு தெய்வத்தைத் தரிசிக்கும் பொன் நாள்!
உழவன் தன் நன்செய்நிலப்படைப்பால் தைமகளை வரவேற்கும் ஆனந்தத்திருநாள்!
இத்தெய்வம் பணி செய்ய வழிகாட்டும் தெய்வங்களைப்!
போற்றி பலசொல்லி புகழேத்தி நிற்கும் அற்புதப்பெருநாள்!
உலகெங்கும் தேர் செலுத்தி ஒளிகொடுக்கும் பரிதி!
அகழ்ந்த பொதும் செயல் பொறுக்கும் மண்மகள்!
அளவறிந்து பொய்க்காமல் பெய்யும் அமுத மாரி!
எனத்தெய்வங்களெல்லாம் ஒருசேர அருளும் தைதிங்கள் முதல்நாள்!
வைகறை நீராடி பொலிவுடன் புதியவற்றைசூடி உழவர்காள்!
தோழியர்சூழ மணவறை சேரும் குலமகள் போல!
கரும்புகள் சூழ இஞ்சிமஞ்சள் அணிகளோடு வாழையெனத் தழைக்க!
உழவர்தம் புதுப்பானை வாழைப்பந்தல் சேர்க்கும் மங்களநாள்!
சேர்ந்த புதுப்பனைதனை கோலமிட்ட பீடத்தில் விறகடுப்பிலேற்றி!
அக்கினித் தேவன் அருள் தனையும் சேர்த்து!
அமுதமாம் நீர்தனையும் வெல்லத்தையும் இட்டு பின்!
தன்கையால் விளைவித்த பொன் தனையும் சேர்த்து!
தம்வாழ்வென்றும் தித்திப்பாய் மகிழ்ச்சி பொங்க வேண்டி!
பொங்கலோப் பொங்கலென ஆர்ப்பரிக்க பொங்கலதைப் பொங்கி!
மண்மகளை மனம் குளிரச் செய்யும் பொங்கற்பெருநாள்!!
இனிது நிகந்ததென உழவர் கண் மலர!
விடிந்தது மறுநாள் மாட்டுப் பொங்கலாய் மலர!
உழவர்தம் மூன்றாம் கரம்தனக்கு புகழ்சேர்க்கும் திருநாள்!
விருந்து தருபவளுக்கே விருந்துபசரிக்கும் புனித நாள்!
காளைகளை அடக்கும் காளைகளுக்கு புகழ்சேர்க்கும் வீரம்நிறைநாள்!
அறத்தோடு மறம் போற்றும் உழவர்பெருமை சிறக்கும்நாள்!!
விளையாட்டின் வேகத்தோடு காலம் அது சேர!
விழிதிறந்தால் வந்து சேர்ந்தது காணும் பொங்கலாக!
சுற்றி வரும் உலகிற்கு எல்லாம் படைப்பவனுக்கு!
சுற்றத்தொடு சேர காணும் பொங்கலெனும் ஒருநாள்!
உழவர் காணும் இடமெலாம் வளம் பெருக!
கூடிக் கண்டு களிக்கும் இன்பத் திருநாள்!
தீயவையே போ நல்லவற்றையே காண் என!
போவில் தொடங்கி காணில் முடியும் அற்புதத்தத்துவம்!
உழவரைப் போற்றும் நான்கு நாள் உற்சவம்!
தமிழர் சிறப்பு கூறும் தமிழர் திருநாள்!
வாழ்வில் துறவோடு வளம்சேர்க்கும் உழவர் திருநாள்
சத்ய சுகன்யா சிவகுமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.