அழகழகு வண்ணத்திலே!
பூப்போட்ட ஒட்டுத்துணி!
கச்சிதமா தச்சி வெச்ச!
அந்தக்கால மணிபர்சு..!!!
அஞ்சுகாசு... பத்துகாசு..!
நாலணா எட்டணான்னு!
பாட்டியோட சுருக்குப் பையி!
பாக்க ஒரு குட்டி வங்கி...!!!
வெத்தல பாக்குவாசம்!
மணமணக்கும் பையிலதான்!
பல்லுகுத்தும் குச்சியோட!
அடமான சீட்டிருக்கும்..!!!
நெடியோட பொடிடப்பா!
பொட்டலமா விபூதியுந்தான்!
பிதுங்கி வழியும் சுருக்குப் பையி!
பாட்டியோட பொக்கிஷந்தான்..!!!
வீதிதோறும் கூவிக்..கூவி...!
கீரை வித்த காசிருக்கும்!
பாட்டி நடக்கையிலே !
பையி பக்கதாளம் போட்டிருக்கும்..!!!
பாசமான பாட்டிக்கிட்ட!
மிட்டாய் வாங்க துட்டு கேட்டா - அவ!
சுருக்குப் பையில் கையவிட்டு !
தந்த காசில் அன்பிருக்கும்...!!!
பாட்டி இடுப்பு சுருக்குப் பையி!
அழகான தொப்பை வங்கி!
எப்ப வேணா காசு தரும்!
எங்களுக்கு அந்தக்கால ஏ.டி.எம்மு..!!!
டூரிங் டாக்கீஸ் போவதற்கும்!
துட்டு தரும் நல்ல வங்கி!
பாட்டி ஆசிர்வதிக்கையிலும்!
அள்ளித்தர கல்லாப்பெட்டி...!!!
துன்பமின்னு வந்துவிட்டா!
வீட்டு நகை தூங்கப் போகும் - நகை!
தூங்க நல்ல பஞ்சனதான்!
வங்கியில சுருக்குப் பையி...!!!
ஒளிவு மறைவு வணிகத்தில!
ஒசந்திருக்கும் சுருக்குப் பையி!
வைரம் மின்னும் அந்தப் பையின்!
விவரம் மட்டும் ரகசியந்தான்..!!!
அந்தக்கால சுருக்குப் பையில்!
அன்போட கனமிருக்கும்!
இந்தக்கால மணிபர்சில்!
மாண்டுபோச்சு மனித நேயம்...!!!
அள்ளித் தந்த சுருக்குப்பையி!
போனதெங்கோ தெரியவில்ல..!
மணிபர்சு கனகனத்தும்!
நல்ல மனசுமட்டும் காணவில்ல
சொ.சாந்தி