பார்வைக் குடுவையில்!
நிரம்பிச் சரியும் பாலைநிலத்துகள்களை!
ஒளிபட்டு மின்னும் தங்க மீன்களெனவும்!
கடற்குதிரைக் கூட்டமெனவும் கற்பித்த வண்ணம்!
மனோரதங்கள் தரிகெட்டுத் திரிகின்றன…!
விருட்சங்கள் வெளியேறிய வனத்தில்!
ஒற்றைச் சிறகு மறைக்கும் கதிரே!
மற்றைச்சிறகின் மீதான நிழலாகப் படர்கிறது…!
கனவுகளின் பாய்மரம் விரித்து!
சிறகடித்துச் செல்கிறேன்!
வழிநெடுகும் வியர்வைக் கடல் பெருகி!
ஏக்கச்சிப்பிகள் மட்டுமே கரையொதுங்குகின்றன..!
கரையே கடலாகவும்!
கடலே உடலாகவும்!
கலந்து கரைந்துருகிக் கிடக்குமிடத்து!
எனதுறுபசி ஆற்றும் அமுதம்!
எந்த மணல்மேட்டில் வழிகிறதென்றே தேடியலைகிறேன்!
நண்டுகள் நடந்த சுவடுகளைப் பின்பற்றி…

அவனி அரவிந்தன்