காற்று அவள் முற்றத்தில்
வீசமறுக்கிறது
ஏனோ அங்கு வந்து திரும்பும்போது
காற்று கனமாகி போகிறது
முன்பெல்லாம்
அந்த வீட்டின் புன்னகையை மகிழ்ச்சியை
அள்ளி ஆனந்தமாய் சென்ற தென்றல்
இப்போது சோகம் சுமக்கிறது
அழுகையும் கண்ணீரும் அள்ளிக்கனக்கிறது
முற்றம் பெருக்கி
முழுவதுமாய் நீர் தெளித்து
நிற்கும் தலைவன் நிழல் தேடி சலிக்கிறது
அவன் தோள் ஏறி ஊர் பார்க்கும சிறு பிள்ளை
புன்னகையில் தோய துடிக்கிறது
இருள் முடும் பொழுதொன்றில்
சென்றவன் தான் இன்னும் திரும்பவில்லை
ஒளியிழந்து இருண்டு கிடக்கிறது இல்லம்
அவள் விழி நீர் வழிந்து கிடக்கிறது வாசல்
தென்றல் அந்த சோகம் சுமக்க அஞ்சி
திசை மாறி செல்கிறது
வேலணையூர் தாஸ்