விலகலுக்கான நெருக்கத்தில் - தர்சினி சண்முகநாதர்

Photo by FLY:D on Unsplash

பருவச்சுழற்சியில் !
பாதையோரப் பனித்துளிகள் !
கசிந்துருக !
கொட்டும் பனியும் !
கருக்கும் வெயிலுமில்லாத !
இளவேனிற் காலத்து !
இதமான ஆரம்பம் !
ஏனோ !
மனவெளிமட்டும் !
புழுங்கித் தவிக்கிறது !
சைக்கிளில் பள்ளிபோய் !
சாயங்காலம் !
ரியூஸனுக்கும் போய் !
கச்சான் கடலைக்காய் !
கோயில் திருவிழாபோய் !
நிலவுமிழும் ராத்திரிகளில் !
நீள நடந்தலைந்து !
பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட !
பால்ய நட்பல்ல எங்களது !
அந்நிய தேசமொன்றின் !
அர்த்தப்படாத வாழ்க்கையில் !
உணர்வுகளைத் தேடி !
உறைந்து போயிருந்தேன் !
பனிக்கால மரங்களைப்போல் !
பட்டுப்போன என் !
நட்பின் வேர்களுக்கு !
இந்த கால்ற்ரன் வளாகத்தில் !
வைத்து !
நீதான் நீரூற்றினாய் !
எனக்குள்ளிருந்த !
உணர்வின் உயிர்ப்புக்களை !
உலுக்கியெழுப்பினாய் !
விழித்து நானெழுகையில் !
விடைகொடு என்கிறாய் !
போய்வா நண்பனே !
நீயும் நானும் சேர்ந்து !
பீட்ஸா கடித்த !
யுனிசென்ரர் நாற்காலிகள் !
இனியும் அங்கிருக்கும் !
அருகமர்ந்து !
மடல்கள் மாற்றிக்கொண்ட !
மக்கன்ஸி கணனிகளும் !
அங்கேதானிருக்கும் !
வகுப்புக்குப் போகாத !
வசமான நேரங்களில் !
சுற்றி நாம் நடந்த !
சுரங்கப் பாதைகளும் !
நீண்டிருக்கும் !
பரீட்சைத் தாள்களில் !
படிக்காததையும் !
இறக்கிவைத்துவிட்டு !
பித்துப் பிடித்ததுபோல் !
பேசாமல் நாமிருந்த !
ஆற்றுப் பாறைகளும் !
அங்குதானுறைந்திருக்கும் !
ஆனாலும் !
நீ !
இப்போது போகவேண்டும் !
போய்வா நண்பனே !
இது விடைபெறும் நேரம் !
கைகளில் !
பட்டம் !
நெஞ்சினில் !
கனக்கும் நினைவுகள் !
கண்களில் !
நாளைக்கான !
கனவுகளையும் மீறிய !
ஈரக் கசிவுகள் !
நீ !
புறப்பட்டுவிட்டாய் !
போய்வா நண்பனே !
இது விடைபெறும் நேரம் !
நாளை... !
அசைன்மென்ஸ் !
லாப்ஸ் எக்ஸாம்ஸ் !
எல்லாம் உறிஞ்சி !
எஞ்சியுள்ள என் நேரங்களில்... !
யாரோ முணுமுணுக்கும் !
உனக்குப் பிடித்த !
சினிமாப் பாடலில் !
ஓங்கியுயர்ந்த !
மரங்களின் அடியிலிருக்கும் !
ஒற்றை நாற்காலியில்... !
உதிர்ந்திருக்கும் !
உனது !
ஞாபகத்துணுக்குகளை !
நான் ஒன்று !
சேர்த்துப்பார்க்கலாம் !
எப்போதாவது !
நீயனுப்பும் மடல்களில்... !
ஏதோவொரு !
திருமண அல்பத்தில்... !
இப்போதைய உன்னை !
இனம்காண முயற்சிக்கலாம் !
வாழ்வற்ற !
வாக்குறுதிகளிலும் !
ஆதாரமற்ற !
நம்பிக்கைகளிலும் !
சுமக்கவியலாத இந்த !
பிரிவுச்சுமையிற்கு !
கொஞ்சம் சாய்ந்துகொள்ள !
உள்ளம் கெஞ்சுகிறது !
உன் தோள்வளைவில் !
என் முகம்புதைத்து !
ஓவென்று கதறியழுது !
ஆசுவாசப்படுத்திக் கொள்ள !
மனம் அவாவுகிறது !
ஆனாலும் !
முடியவில்லை நண்பனே !
உன் !
இமை விளிம்புகளுரசும் ஈரம் !
என் விழியுடைப்பிற்காகத்தான் !
காத்திருக்கிறதென்பது !
தெரியும் !
ஆதலால் !
முடியவில்லை !
போய்வா நண்பனே !
இது விடைபெறும் நேரம் !
சற்றுமுன்... !
என் எலும்புருக்கி !
நீயணைத்து நின்ற !
அந்த கனமான நொடிகளாய் !
எனக்குள்ளும் !
உனக்குள்ளும் !
எம் நட்பு !
சாஸ்வதமாயிருக்கும் !
அதனால் !
போய் வா நண்பனே... !
!
நன்றி :: !
கால்ற்ரன் பல்கலைக்கழக தமிழ் பட்டதாரிகளின் மலர் 2002
தர்சினி சண்முகநாதர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.