கடலோரம் பெருவனங்கள்!
கரைநெடுக நெடுமரங்கள்!
படல்வீடே ஈழமுகம்!
பண்பாடே ஈழநிலம்!
படகெல்லாம் மீன்கள்வளம்!
படுகரையில் உப்பின் அளம்!
குடிதோறும் தென்னைவளம்!
குறும்பலா தரைதவழும்!
கரையோரம் நெய்தல்நிலம்!
கரைதாண்டி முல்லைவளம்!
மருத நிலம் நடுநாடு!
மண்மனக்கும் வயற்காடு!
பழந்தமிழர் கொல்லையெலாம்!
பனைமரங்கள் எல்லைகளாம்!
பழம்பதியின் முதற்குறியே!
பனைமரத்தின் முகவரியே!
நான்டுநிலம் கொண்டதனால்!
நானிலமே எமதீழம்!
நன்னிலத்தில் நெல்வாழை!
கன்னலுக்குக் கரும்பாலை!
நான்குநிலம் கொடுங்கோலாய்!
அஞ்சு (ம்)நிலம் ஆனகதை!
ஈழயினம் சிங்களத்தால்!
ஏழையினம் ஆனகதை!
அஞ்சும்நிலம் தடைமீறி!
மிஞ்சிநின்ற வேரின்கதை!
சிங்கத்தை வேங்கையினம்!
சீறிநின்ற போரின்கதை!
ஞாலமெல்லாம் எம்மினத்தை!
நடுக்களத்தில் விற்றகதை!
ஓலமிட்டு லட்சம்பேர்!
உலைக்களத்தில் வெந்தகதை!
கண்ணுள்ளார் காணவில்லை!
காதுள்ளார் கேட்கவில்லை!
குழந்தைகளை மீட்கவில்லை!
குமரிகளைக் காக்கவில்லை!
வாதை தடுப்பதற்காய்!
வேண்டினோம் டெல்லிக்கொடி!
வதையை நிறுத்திவிட!
வணங்குகிறோம் தொப்புள்கொடி!
எக்கொடியும் வரவில்லை!
இக்கொடியர் போர்நிறுத்த!
வக்கரித்த தேர்தலிலே!
வாக்களித்த தமிழர்களே!
மீளவும்யாம் எண்ணுகையில்!
நாளைஉயிர் யார் கையில்?!
ஈழமின்று நிலச்சிறையாய்!
வேலியிட்ட வெளிக்கடையாய்...!
ஒருகுவளை நீருக்கும்!
ஒருகவளம் சோற்றுக்கும்!
எம்நிலத்தில் கையேந்தி!
எம்குலத்தோர் வேகையிலும்!
நம்பிக்கை தளரவில்லை!
நட்சத்திரம் இருளவில்லை!
தம்பிக்கை உயிர்த்தெழும்பும்!
சரித்திரத்தைப் பெயர்த்தெழுதும்
தணிகைசெல்வன்