அறிவியலும் முன்னேற்றமும் - தமிழ்நம்பி

Photo by Jorge Zapata on Unsplash

ஒளிவிளக்கு மின்விசிறி ஓயாத கைப்பேசி!
ஒழிச்சல் இன்றி!
களிக்கஅழச் செய்யுதொலைக் காட்சியொடு சமைக்கபல!
கருவி கண்டோம்!!
குளிப்பதற்கு வெந்நீரும் குடிப்பதற்குக் குளிர்நீரும்!
கொடுப்ப தற்கும்!
எளிதாகப் பலகருவி எல்லாஊர் கடைகளிலும்!
இன்று உண்டே! !
உடனடியாய்க் கணக்கிடற்கு ஓர்கருவி! எதுகுறித்தும்!
உங்கள் ஐயம்!
உடனேயே தீர்த்திடற்கு உண்டுகணிப் பொறிமேலும்!
உழவு செய்ய!
நடவுநட கதிரறுக்க நன்றாய்நெல் பிரித்தெடுக்க!
நாட்டில் இன்று!
மடமடெனப் பலபொறிகள் மலிந்தனவே! மிகவிளைய!
மண்ணுக் கேற்ற!
பல்வேறு உரங்களொடு பயிர்கெடுக்கும் பலவகையாம்!
பூச்சி கொல்ல!
வல்லபல வேதிகளும் வகைவகையாம் நச்சுகளும்!
வந்த திங்கே!!
செல்லபல இடங்கட்கும் சிறப்பான விரைவூர்தி!
செய்துள் ளாரே!!
நல்லபல வசதிகளும் நாம்பெற்றோம் அறிவியலால்!
நன்மை யுற்றோம்!!
விண்வெளியில் திங்களிலே வேறுபல கோள்களிலே!
வியக்கும் வண்ணம்!
நுண்ணியபல் லாய்வுகளும் நொய்ப்பமுற செய்கின்றார்!
நோக்கில் ஒன்றி!!
எண்ணிலவாய் முன்னேற்றம் எழுந்துளது மருத்துவத்தில்!
எல்லா நோய்க்கும்!
ஒண்ணலுறும் மருந்துகளும் உருவாக்கி உள்ளநிலை!
உணர்ந்தே உள்ளோம்!!
இவ்வளவும் அறிவியலில் இனும்பலவும் முன்னேற்றம்!
இருந்தபோதும்!
செவ்வையிலாச் செயற்கையினால் சீர்குலைவால் நீர்காற்று!
செம்மை கெட்டும்!
ஒவ்வாத பல்வேறு உரங்களினால் மண்வளமும்!
ஒழிந்து போக!
நொவ்வுற்றோம்! அறிவியலை நொய்ம்மையிலா முன்னேற்ற!
நோக்கில் ஆள்வோம்
தமிழ்நம்பி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.