01.!
திசை!
--------!
தனிமை முகத்திலறைந்த ஓரு தருணத்தில்!
எனக்குள் நிகழ்ந்த உரைடலுக்குள் புரண்ட!
யோசனையின் தீவிரத்தில்!
உதட்டின் உள்பகுதியை கடிக்க!
அரளிப்பூ நசுங்கிய பிசின் வாசத்தோடு!
துளிர்த்தது உப்புக்கரித்த குருதி.!
அப்போதென் எனது வலப்பக்கம் மலையும்!
இடப்பக்கம் ஆழியும் இருந்தது!
!
பனிக்குளிர்ச்சி விரல் பற்றியிழுத்தது!
குழப்பத்திலிருந்தேன்!
வலத இடதாவெனத் தீர்மானிக்க இயலாது.!
எதிர்பாரக்கணத்தில் பற்றிய பனிவிரல்கள்!
எரியும் மெழுகுவர்த்தியாக!
உருகும் எலும்புகளைக்!
கரையொதுக்கிக்கொண்டிருக்கிறது !
ஆழிப்பேரலை!
சரியும் உடல்தனைக்!
கூழாக்கிக்கொண்டிருக்கிறது நெடுமலை!
02.!
ஜனனம்!
-------------!
!
கேவல்கள் மிகுந்த!
நெடிய இரவொன்றில் இமைமூட!
பாரமாய் அழுத்தியது!
உருவமற்ற துயரத்தின் நிழல்!
எல்லா முயற்சிகளும்!
தோற்றுபோயிருந்தன!
மனசின் கீறல்களை!
மௌனமாய் தடவிக்கொண்டிருந்தது!
வரண்ட ஆன்மா!
முற்றிலும் எதிர்பாரக்கணமொன்றில்!
குளிரக் குளிரப் பெய்தது மழை.!
அந்தப் பெய்தல் கணம் வரையிலான!
எல்லாப் பிரார்த்தனைகளுக்கும் சேர்த்து!
அருளிய வரமாய்!
சந்தோஷம் பொங்கியது பெருகி.!
எல்லாத்துயரையும் அழித்தெழுதி!
செழித்துத் துளிர்த்தன!
சருகுகள் மிகுந்த வனத்தின்!
வெற்றுக்கிளைகள்!
உவகையில் பூத்துக்குலுங்கி.!
!
03.!
நீலக்கனல்!
--------------!
!
இன்றெனது மடிக்கணிணியில் திரையில்!
இரு நீல வாத்துகள்!
நீந்திக்கொண்டிருக்கின்றன!
படிக்கும் மேசையில்!
வீணையேந்திய நீல சரஸ்வதி!
செம்பருத்தியோடு சிரிக்கிறாள்!
எனது தனிமை விஷத்தில்!
நீலம்பரித்திருக்கிறது!
உடல்!
உறிஞ்சக் காத்திருக்கும்!
உன் உதடுகளும் தவித்தபடியிருக்கின்றன!
உணர்வின் நீலத்தில்!
இரு நீல விளக்குகளோடு!
உயர்ந்த தூண்கள் தாங்கும்!
என் வீட்டின் அகன்ற இரும்புக்கதவுகளை!
திறந்து வெளியேறுகிறேன்!
நீல இரவின் கொள்ளையழகு!
வழிகிறது என் மதுக்கண்ணில்!
நான் அணிந்திருக்கும்!
ஆழ்நீலப் புடவை நழுவுகிறது!
வலிந்து வீசும் காற்றில்.!
நீயின்றி என்னுள்!
நீருபூத்திருக்கிறது!
காமத்தின் கருநீலக்கனல்.!
-தாரா கணேசன்
தாரா கணேசன்