ஓரமாக
நடந்து பழகிய
கால்களின் கால்கள்தான்
உங்களின் பாதைகளில்
நடக்கத் துவங்கியது
இனத் துவக்க எழுச்சியாக
ஏக்கச் சுவை மொட்டுகளுக்கு
நம்பிக்கை
ஆசுவாசங்களைத் கொடுத்து.
இணக்கப் பயணத்தில்
எதிர்கொண்ட
இன்னல்கள் ஏராளம்
எப்பொழுதும்
சகோதர
திசை மாற்றி
சந்தர்ப்ப குதறலின்
தந்திரக் குழிகளால்
நிறைந்திருந்த
ஆதுரம் மேவியதான
உங்களின்
அத்தனை
அங்கலாய்ப்புகளுக்கு
இடையிலுமான
பரிவு.
யாதொரு குற்றமற்று
எம்மால்
நிகழ்ந்த மாற்றங்கள்தான்
வரலாறாகி இருக்கும்
பளபளப்பு
அடையாளங்கள்.
பகட்டுப் பொய்களில்
நீங்கள்
பாராளும்பொழுதும்
இயல் உண்மையாக.
தொடத் தயங்கியவைகளின்
லயம் கூட்டிய
இசையில் தான்
இப்பொழுது
நீங்கள்
கட்டுண்டு கிடக்கிறீர்கள்
வாயில்
வேதக்கவசங்களைத்
தரித்தாலும்.
நெருப்பாற்றில்
நீந்திய
எமக்குப்
புரிகிறது.
நீங்கள்
நீதி பரிபாலன
பொய்களில்
நூல் பிடித்து
தப்பித்துக் கொள்ளும்
நுண்ணறிவுகளால்
நிறைத்திருப்பது
தந்திரோபாய
தகிடுதத்தங்களில்
தலை சிறந்வர்களென்பதால்
மட்டுமல்ல
அதிகார துணைகொண்டே
அநீதமிழைத்தவர்கள் என்பதாலும்.
வென்று கொண்டிருக்கும்
இவ்வேளையில்
கொன்றழித்த
கோபத்திற்கு
சிறை நிறைப்போமென்ற
உங்களின்
சின்னப் புத்தி
புரிகிறது
எமக்கான
நிதானப் பாடுகளில்.
வஞ்சகத்தில்
வீழ்ந்து
வழி வழியாக
வீறு கொண்டு
பெரு நாச
பேராயுதம் எடுக்கவிட்டபோதும்
பாடிப்பாயுதம் ஏந்தி
பாதிபேர்
பயணிக்கிறார்கள்
வெல்லும் கலையை
கற்று
நாங்கள்
வெகு நாட்கள் கடந்திருப்பதால்.
ரவி அல்லது