பிழைப்பைத்தேடி
பறந்து சென்ற என்
ப்ரியமான கணவனுக்கு!
வேர்களை யாரும் இறந்த பின் புதைப்பதில்லை
சாகும் முன்பே புதைந்து வாழும் வேர்களாய் நீயும்
மறைந்து வாழும் அர்த்தம் என்ன?
நீர் தேடும் வேர்களாய் நீ
எத்தனை தூரம் ஓடினாலும்
பூத்துக் குலுங்குவதும் வெளிச்சத்தில் நிற்பதும்
பூக்களும் காய்களும்தான்...நீயல்ல
தூரத்தில் பொழியும் மழை வேண்டாம்
நமதருகில் விழும் சிறு தூறல் போதும்
வா!
உன்னை வேர்களாய் தொலைத்து
உன் வேர்வை உறுஞ்சல்களில்
நாம்
பூத்துக்குலுங்க வேண்டாம்.
அந்த வறுமையின் இருட்டிலும்
சேர்ந்துதானே இருந்தோம் - நீ
வெளிச்சம் வாங்க பறந்து சென்றாய்.
நம் பார்வையையே தொலைத்து விட்டது - 'தூரம்'.!
இரண்டுமே இருட்டுதான்!
வா!
பிரிவில் பார்வை இழப்பதை விட
ஏழ்மையின் இருட்டில் இருப்போம்.
வாழ்வின் வரைவிலக்கனத்திற்கு
வார்த்தைகள் தேடிச் சென்றாய்,
மொழியை மறந்து விட்டாய்.
எல்லாமே போதும்
நீ மட்டும் வந்து விடு!
- நதீர் சரீப் , அக்கரைப்பற்று
நதீர் சரீப்