துவக்கம் - அன்று
தாயின் கருவறையில்
தந்தையால் இடப்பட்டு
கணவனால் இடர்பட்டு
துயரித்த கணங்கள்
பெற்ற மக்களினும் பேனாது விடப்பட்டு
அலைக் கழிந்த உடல்
இப்போது ’எனக்கான’ மண்ணறையில் !
தொடர்ச்சி - இன்று
அவர்கள் திரும்பிச் செல்லும்
காலடியோசை கேட்கிறது
ரோமங்களின் சிலிர்ப்பும்
பரவசமூட்டும் ஆனந்தமுமாய்
எனது நிலைக்கலன்கள் குதிக்கின்றன
மேற்கு நோக்கி இருத்தமுற்ற
இறுக்கமுறும் இருப்பில்
சுவாசம் மறந்து போன செவிப்புலனில்
தேய்ந்து போகும் ஓசைகள் இனிமையாய்
பார்வை தப்பிப் போன இருளின் வெளிச்சத்தில்
விடுதலை தேடி விழிகள் விரிகிறது
மந்தகாச புன்னகையோடு
சர்மம் தீய்க்கும் சுட்டெரிக்கும் பார்வையாய்
சென்றவர்கள் விட்டுச் சென்ற காலடித்தடங்கள்
அவற்றில்
தூசி படியத் துவங்கும் முன்பே
எனக்கான சுகப்பயணம்
தடயங்களற்று இனிதே கழிகிறது!
- சு.மு.அகமது

முஸ்தக் அஹ்மெத்