வெட்கச் சிவப்புகள் ஏதுமில்லை
சின்னச் சிணுங்கல்கள் துளியுமில்லை
கன்னக் குழி அழகுகள் காணவில்லை
கட்டை விரல் கோலங்களும் இல்லாமல்
அமைதியாய் நான்!
தாலிகயிறு இன்னும் ஏறவில்லை
தொப்புள் கொடியும் அறுபடவில்லை
மெட்டி போட்டுவிட ஒருவனில்லை
சடங்கு சம்பிரதாயத்துக்கு வாய்ப்பில்லாமல்
அமைதியாய் நான்!
சாளரத்தை சாத்திவிட்டு
கதவெல்லாம் பூட்டிவைத்து
ஆடைகளை அவிழ்த்து போட்டு
மனசை மட்டும் இரும்பாக்கி
அமைதியாய் நான்!
தொட்டுபார்க்க ஒருவன்
சுவைத்துப் பார்க்க ஒருவன்
நோய்கள் காவிவரும் ஒருவன்
கர்ப்பத் தடைகளோடு அவர்களுடன்
அமைதியாய் நான்!
இன்றைய முகம் நாளை காண்பதற்கில்லை
எனக்கும்தான் முகவரியும்
முகங்களும் நிரந்தரமில்லை! - ஆனாலும்
அமைதியாய் நான்
மீரா ஜோதிலிங்கம்