இப்போது
இருளைச் சுவாசிக்கிறது ஊர்;
வெளிச்சம் விலக்கிய நரம்புகளை
மீட்டுகிறன, இதன் விரல்கள்.
இமை திறந்த
இரவின் கைகளில் இந்தப் பூமி
நிர்வாணமாய்த் தன்னை
ஒப்படைக்கிறது.
இருள்மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளா விளக்குகள்?
எங்கே அவை?
ஒளித் தூசுகள்
உதிர்ந்த இரவின் சிறகுகள்
எங்கும் விரிகின்றன.
பறிபோகாத அந்தரங்கம்
பத்திரப்படுத்தப் படுகின்றது..
விஞ்ஞானம்
நிம்மதி தேடிப் போய்
விண்ணப்பிக்கிறது இயற்கையிடம்.
வானொலி தொலைக்காட்சிகள்
தவறுகளுக்கு
மண்டியிட்டு யாரிடம் கேட்கின்றன
மன்னிப்பு?
வலிகளி வார்த்தைகளைக்
காயங்கள்
உரக்க உச்சரித்தாலும்,
நோயாளிகள்
பாயில் அமர்ந்த மரணம்
அஞ்சாதீர்கள்
அவசரப்படவில்லை நான் என்கிறது.
மூடப்பட்டன
பாடநூல்கள் எனும் மகிழ்ச்சியில்
கல்வி
கலந்துரையாடுகிறது மாணவர்களோடு!
தேர்வு
வெப்பங்கள் மீது பாய்கின்றன
ஈரக் கறுப்பு அலைகள்!
விடைகள்
விளக்குகள் அணைந்த தருணம் பார்த்து
வெளிப்படுகின்றன.
கனவுகளுக்குத்
திறந்து வைக்கப்பட்ட அறைகளில்
காதலர்கள்
பரிமாறிக் கொள்ளும் முத்தங்களைச்
சிந்தாமல் சிதறாமல்
சேகரித்துக் கொள்கிறது இருள்;
இதற்கென்றே
இருள் தூங்காமல் இருக்கிறது.
வெளிச்சத்தால்
தண்டிக்கப்பட்ட இரவு
இதோ
விளையாடிக் கொண்டிருக்கிறது
விடுதலையாகி!
(நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் கவிதைத் தொகுப்பிலிருந்து)
ஈரோடு தமிழன்பன்