பெண்ணே!!
பகலிரவாய் படித்து!
பற்பல தேர்வுகள் எழுதி!
பல்கலைக் கழகத்திலும் நீ!
பார்க்கமுடியாத பட்டங்களை...!
இல்லற வாழ்க்கை உனக்கு!
இலவசமாய் வழங்குகிறது!!
கணவன் ஏச்சுக்களில்தான் எத்தனை!
கணக்கற்ற பட்டங்கள்!!
கழுதையென்றும், கழிசடையென்றும்!
கௌரவப் பட்டங்கள்!!
மாமியாரின் வசைகளிலோ!
மகத்தான விருதுகள்!!
சண்டாளியென்றும் சாகசக்காரியென்றும்!
கொண்டவனைக் கைக்குள் போட்டு!
குடிகெடுக்க வந்தவளென்றும்!
தலையணை மந்திரம் ஓதி!
தனிக்குடித்தனம் செல்பவளென்றும்!
தாளமுடியா வசவுகள்,!
மீளமுடியா துயரங்கள்!!
பூமித்தாய்க்கு நிகராக!
பொறுமைதனைக் கொண்டோர்!
பூவையரென்று உரைக்கும்!
பொன்மொழியை நினைவுகொள்!!
பத்து மாதங்கள் சுமந்து நீ!
பெற்றெடுக்கும் மகவு உன்னை!
“அம்மா!” என்றழைக்கும் அப்பட்டம் உன்னை!
அகமகிழச் செய்யும் வரை
சி. கலைவாணி,வேலூர்