எறிந்தவள்!
01.!
இந்தப் பாடல்!
-------------------!
ஒரு தொட்டிலாக ஆட்டுவதற்கோ!
அன்றி!
ஓர் ஆரத்தித் தட்டாக ஏந்துவதற்கோ!
ஆகாதது இப்பாடல்!
ஒரு கனவை விபரிப்பதற்கோ!
அன்றி!
ஒரு கனவானைத் துதிப்பதற்கோ!
ஒவ்வாதது இப்பாடல்!
ஒரு சிரிப்பாக வெடிப்பதற்கோ!
அன்றி!
ஒரு கூத்தாக நடிப்பதற்கோ!
முனையாதது இப்பாடல்!
ஒரு காதலில் கசிவதற்கோ!
அன்றி!
அதன் கண்ணீரில் மசிவதற்கோ!
அணையாதது இப்பாடல்!
ஒரு காகம் போல் கரைவதற்கோ!
அன்றி!
ஒரு கிளியைப் போல் கதைப்பதற்கோ!
முயலாதது இப்பாடல்!
ஒரு கைத்துப்பாக்கியாக நீட்டவோ!
அன்றி!
ஒரு கைக்குண்டாக வெடிக்கவோ!
விரும்பும் இப்பாடல்!
02.!
என்னைத் தீயில் எறிந்தவள்!
------------------------------------!
நீ அறிய மாட்டாய்!
ஒரு!
பூ உதிர்ந்தால் கூடப் பொசுங்கும் மனசு இது!
உனது வருத்தம் உனக்குப் பெருஞ்சுமைதான்!
அவலத்தை உரைத்தாய் நீ!
எனக்குள் பூத்திருந்த!
ஒரு கோடிப் பூக்களிலும்!
தீப்பற்றிக் கருகிற்று!
நோன்பு நாட் காலையொன்றில்!
வந்திருந்தாய்!
வெளிநாடு போயேனும் வறுமை துடைப்பதற்கு!
சிறிசுகளுக்கேனும் சோறு இடும் கனவுகளைக்!
கலங்கிக் கிடந்த கண்ணில் வைத்திருந்தாய்!
‘பாஸ்போர்ட்’ உன்வயதை முப்பதெனக் காட்டிற்று!
சின்ன வயதில்!
நரை விழுந்து கிழடு தட்டி!
பாதிப் பல் விழுந்து பரிதாபமாய் நின்றாய்!
முப்பது வயதுக்குள் மூப்பான ரகசியத்தில்!
சந்தேகங்கொண்ட!
பெரும்பான்மைப் பெரியவரின்!
பிடியில் நீயிருந்தாய்!
உன் மொழியை அவர் புரியார்!
கவலை தின்று!
காற்றுக் குடிக்கின்ற கலையறிவாய் நீ!
அவர் அறியார்!
உன்னை விசாரிக்க என்னை ஏன் பணித்தார்!
சொன்னாய் நீ எல்லாம்!
அந்த அதிகாலை எனக்குள் பூத்திருந்த!
ஒரு கோடிக் கவிதைகளும் தீப்பற்றிக் கருகிற்று!
‘....ரெண்டு வரிசமாச்சி!
கொள்ளியெடுக்கப் போனவர சுட்டுப்போட்டாக...!
மூணு புள்ள எனக்கி!
ஒரு றாத்தல் பாண் வாங்கித் தின்னச் செல்லி!
தங்கச்சிக்கிட்ட பாரங்குடுத்துட்டு வாறன் வாப்பா...!’!
ஒரு!
பூ உதிர்ந்தால் கூடப் பொசுங்கும் மனசு இது!
நீ அறிய மாட்டாய்தான்!
என் கண்ணில் குளம் கண்டு!
உன்னை அனுமதிக்க!
போனாய் நீ பெண்ணே!
என்னை ஒரு பெருந்தீயில் எறிந்து விட்டு
அஷ்ரஃப் சிஹாப்தீன்