அகமாறாட்டம் - அமல் சி தேவ்

Photo by Marek Piwnicki on Unsplash

என் 'அகம்' 'அகங்காரமாய்'
என் உத்தரவுதானின்றியே
எச்சரிக்காது மாறிடுகின்றதே;
என் உள்ளுக்குள் உறைந்தே
என்னால் எனக்குத்தானே
எதிரியாய் ஆகிவிடுகின்றதே...

நிமிஷங்களிலே என்
நிர்மல இதயத்தையே
நிராகரித்துவிடுகின்றதே;
தேவதூதனாய் நான்
திரியும் க்ஷணங்களிலே எனைத்
துஷ்ட சாத்தான் ஆக்கிடுகின்றதே...

பூனையாகி என்
பயமெனும் எலிகளைப்
பிடித்துக் கொல்லுகின்றதே;
எலியாகவே பலமுறை என்
எதேச்சைப்பூனைக்கு அஞ்சி
எங்கோ மறைந்தும் ஒழிகின்றதே...

இராணுவ வீரராகி என்
இச்சாசக்திகளுக்கெதிராய்
இலட்சியப்போர் தொடுக்கின்றதே;
இறகிழந்த பறவைபோல்
இலட்சணக்களை இழந்து
இன்னல்களுக்கும் உள்ளாகின்றதே...

இறையரசுகளின் பெரும்
இனியவிழுமியங்களையெனில்
இனிதினிதாய் விதைத்திடுகின்றதே;
விதைத்தபின் காட்டு யானையாய்
விளைந்துவரும்பயிர்களையே
வதைத்தும் அழித்துவிடுகின்றதே....

தெருநாயாய் உருமாறி
தொல்லைகள் செய்துத்
துரத்தியெனை விரட்டுகின்றதே;
வளர்ப்புநாயாய் என்பின்னே
வாலை ஆட்டிக்கொண்டே இதய
வீட்டையும் காத்துநிற்கின்றதே...

பைத்தியக்குரங்காகி அதுயென்
பூர்ண உடல் உள்ளத்தைப்
போர்க்களமாக்கிடும்போதுமட்டும்
பொறுமையெலாம் இழந்துபட்டு
பாரம் தாங்கவியலாக்கழுதைபோல்
போராடிப்போராடியே பயணிக்கின்றேன்...

என்னதான் செய்தாலும்
என் 'அகம்' ஆனதனால் அதனை
எண்ணியே மன்னித்திடுகின்றேன்;
எனைமறந்துத் தவறேனும்
என்றுமே செய்ய்திடாமல்
எனைத்தானே காத்துக்கொள்கின்றேன்...
அமல் சி தேவ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.